கார்த்தி சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ்
“செந்தில்குமார் செய்திருப்பது தேவையில்லாத சர்ச்சை. இங்கு ஒருவர் புதிதாக வண்டி வாங்கினால்கூட முதலில் எலுமிச்சைப்பழத்தை வைத்து ஏற்றிவிட்டுத்தான் ஓட்டவே ஆரம்பிப்பார்கள். அவரவர் நம்பிக்கையின்படி அவர்கள் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், வேட்புமனுத்தாக்கல், பதவியேற்பு எல்லாவற்றுக்கும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துத்தான் செய்கிறார்கள். கரிநாள்களில், ராகுகாலத்தில் யாரும் பதவி ஏற்பது கிடையாது. ஏனென்றால், அதுதான் நம்முடைய பழக்கம். தி.மு.க கட்சி உறுப்பினர்களில் யாராவது ஒருவரின் திருமணமோ அல்லது பதவியேற்புவிழா போன்ற வேறு சடங்குகளோ நல்ல நேரம் பார்க்காமல் நடந்த நிகழ்வுகளைச் சொல்ல முடியுமா… மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால், அவர்கள் எல்லோருமே அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக, திராவிடத்தைப் பின்பற்றுபவர்கள் தவறாக நினைக்கின்றனர். எனக்குப் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் மாடல், கெயின்சியன் மாடல் தெரியும். ஆனால், ‘திராவிட மாடல்’ என்பது எகனாமிக் மாடலா அல்லது சோஷியல் மாடலா என்பது தெரியவில்லை. திராவிட மாடல், சோஷியல் மாடல் என்பதை நான் ஏற்கிறேன். அது எகனாமிக் மாடலா என்பதை தி.மு.க-வினர்தான் விளக்க வேண்டும். இந்தியாவில், பா.ஜ.க-வினர் ஒற்றைக் கட்சி அரசாங்கத்தை உருவாக்க முயல்கிறார்கள். அதைத் தடுக்க தமிழ்நாடுபோல மற்ற மாநிலங்களும் கொள்கைத் தெளிவு பெற வேண்டும்.’’
இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
“சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அரசு விழாவில் மத வழிபாடு தேவைதானா… அப்படிப் பின்பற்ற வேண்டு மென்றால், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மற்ற மத வழிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை… ஒரு தனிமனிதனின் மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்பது வேறு. மதச்சார்பற்ற ஓர் அரசுக்கு எந்த மத, கடவுள் நம்பிக்கையும் இருக்க முடியாது. அதைத்தான் எம்.பி செந்தில்குமார் சொல்லியிருக்கிறார். கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில் நடைபெற்ற எந்த அரசு விழாக்களிலும், எந்த மத நடைமுறையும் இருந்தது கிடையாது. இப்போது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் எந்த மத நடைமுறையையும் பின்பற்றுவது கிடையாது. திராவிட மாடல் என்பது விளிம்புநிலை மக்களுக்கான சமூக சமத்துவம் என்பதைத் தாண்டி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றுகிறது. இங்கு வழங்கப் படும் இலவசக் கல்வி, மருத்துவம் போன்ற அனைத்துமே விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி யிருக்கின்றன. இந்தியாவில் தனிநபர் வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. திராவிட மாடல் சாதித் திருப்பது இதைத்தான். அது குறித்து கார்த்தி சிதம்பரம் படிக்க வேண்டும். பா.ஜ.க மக்களின் கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி வைதீக மரபை வளர்க்கப் பார்க்கிறது. என்றுமே தி.மு.க மூடப்பழக்கங்களை ஒழிக்கப் பாடுபடும்.’’