சென்னை: நாடாளுமன்றத்தில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யையும் செயல்படவிடாமல் தடுத்து, கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை உண்மையான தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மறைந்தது முதல்இன்று வரை நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும், ஒருசில சுயநலவாதிகள் எடுத்த தவறான முடிவுகளால் அதிமுக தன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழப்பதாக தொண்டர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கட்சியின் நலனை காற்றில் பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால் நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சிஅங்கீகாரத்தையும் இழந்தோம்.
இந்த சூழலில், கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு உறுப்பினரையும் கட்சியை விட்டு நீக்குவதும், மக்களவையில் அதிமுகவின் பெயரை சொல்ல யாருமே வேண்டாம் என கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் அதிமுக தொண்டர்கள், அறிவார்ந்த செயலாக பார்க்க மாட்டார்கள்.
நம்மை வளர்த்த இரு பெரும் தலைவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நம் செயல் அமையவேண்டும். ‘கட்சி அழிந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது பதவியை தட்டிப் பறிக்க வேண்டும்’ என்று நினைப்பவர்களின் எண்ணம்தவறானது, கட்சிக்கு எதிரானது என்பது வெளிப்படும் காலம் வந்துவிட்டது.
உண்மை தொண்டர்களோடு கட்சி சீரோடும், சிறப்போடும் செழிக்க இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. எதிர்வரும் மக்களவை தேர்தலில் இதை அனைவரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.