டெல்லி: கடும் எதிர்ப்புக்கு மத்திலும் ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்த ஒன்றிய அரசு தீவிரம்காட்டி வருகிறது. இது தொடர்பான நடைமுறை, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை சட்ட ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக மக்களவையில் நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். நாட்டில் அடிக்கடி தேர்தல்களை நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், அத்தியாவசிய சேவையும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மக்களவை தேர்தல் செலவீனத்தை ஒன்றிய அரசும், சட்டமன்ற தேர்தல் செலவீனத்தை மாநில அரசும் ஏற்பதாக கூறிய அவர், 2014ல் இருந்து 2022 வரை 50 சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஒரேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால் தேர்தல் செலவீனம் பெருமளவில் குறையும் என்றும் செலவீனத்தை 50:50 என்ற விகிதத்தில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற குழு ஆய்வு செய்திருப்பதுடன் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி இருப்பதாக அவர் கூறினார். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் பற்றி மேலதிக ஆய்வு நடத்துவதற்காக நாடாளுமன்ற குழு சட்ட ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 21வது சட்ட ஆணையம், தனது வரைவு அறிக்கையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது என்று உறுதியாக நம்புவதாக கூறினார். நாடு தொடர்ந்து தேர்தல்களை சந்திப்பதை தடுப்பதற்கான தீர்வாக ஒரே நேரத்தில் தேர்தல் அமையும் என்று அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.