போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 3 ரன் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. போர்ட் ஆப் ஸ்பெயினில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அல்ஜாரி ஜோசப் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார் தவான். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சுப்மன் கில், அல்ஜாரி ஜோசப் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து அசத்திய இவர், ஜெய்டன் சீல்ஸ், கைல் மேயர்ஸ் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.
நழுவிய சதம்:
அபாரமாக ஆடிய சுப்மன் கில், 36 பந்தில் அரைசதம் எட்டினார். மறுமுனையில் அசத்திய தவான், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்த போது சுப்மன் கில் (64 ரன், 2 சிக்சர், 6 பவுண்டரி) ‘ரன்-அவுட்’ ஆனார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், நிக்கோலஸ் பூரன் வீசிய அடுத்தடுத்த ஓவரில் 2 சிக்சர் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது மோதி-கன்ஹாய் பந்தில் தவான் (97 ரன், 3 சிக்சர், 10 பவுண்டரி) சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் நம்பிக்கை:
பொறுப்பாக ஆடிய ஸ்ரேயாஸ், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 54 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் (13), சஞ்சு சாம்சன் (12) ஏமாற்றினர். அல்ஜாரி ஜோசப் பந்தில் தீபக் ஹூடா (27), அக்சர் படேல் (21) போல்டாகினர். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 308 ரன் எடுத்தது. ஷர்துல் தாகூர் (7), முகமது சிராஜ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மோதி-கன்ஹாய், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் அணிக்கு, சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. அந்த அணியின் ஷாய் ஹாப்(7) விரைவில் அவுட்டாக, புரூக்ஸ்(46) உடன் ஜோடி சேர்ந்த மேயர்ஸ்(75) அரைசதம் விளாசி, சதக் கூட்டணியை உண்டாக்கினார். பிராண்டன் கிங்(54), பூரன் (25) மிடில் ஓவர்களில் தாக்குபிடிக்க, அடுத்து வந்த ரோவ்மன் பவல்(6 ரன்) சொதப்பினார்.
‘த்ரில்’ வெற்றி:
கடைசி கட்டத்தில் அகீல் ஹூசைன் (32*), ஷெப்பர்டு (39*) அதிரடியாக விளையாடி வெற்றியை நெருங்கினர். கடைசி பந்தில் 6 ரன் அடித்தால் வெற்றி, 4 ரன் அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தபோது, அபாரமாக பந்து வீசிய சிராஜ் 1 ரன் மட்டுமே கொடுத்தார். இதனால் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கியது. ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்