“கட்சித் தலைவர் என்கிற மரியாதையை திமுக கொடுப்பதில்லை” – விளாசும் வேல்முருகன்

“திமுக-வுக்கு ‘சிங்சாங்’ அடிக்கமாட்டேன் என்று பொதுக்கூட்டத்தில் பேசியதற்கானக் காரணம் என்ன?”

“முகநூல், ட்விட்டரில் ‘வேல்முருகன் திமுக-வுக்கு சிங்சாங் அடிக்கிறார்’ என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டே இருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் வகையிலும், நான் துணிந்து கேள்வி கேட்பேன், கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க மாட்டேன் என்பதையும் தெரியவைக்கவே அப்படிப் பேசினேன்”

வேல்முருகன்

“’கண்முன்னே அநியாயம் நடந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்கிறீர்களே?”

“வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வீடுகட்டிக் கொடுக்கப்படவில்லை. வன்னியர் பெண் பாதிக்கப்பட்டால் நிதியுதவி கிடைப்பதில்லை. துணை வேந்தர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மேயர் உள்ளிட்டவற்றில் பிரதிநித்துவம் கொடுக்கப்படவில்லை. இப்படியான அநியாயங்கள் நடப்பதைத்தான் நான் அரசிடம் எடுத்துச்சொல்லி வருகிறேன். ஆனால், திமுக-வில் என்னை பத்தோடு பதினொன்றாகத்தான் நடத்துகிறார்கள். கட்சி தலைவர் என்கிற மரியாதைக் கொடுப்பதில்லை”

“வி.சி.க-வினரும்கூட தங்கள் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிறார்களே?”

“இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னைப் போல வெளிப்படையாக திருமாவோ, மற்ற யாருமோ சொல்லட்டும். நான் ஓராண்டுகாலமாக ஜனநாயக ரீதியாகப் பேசினேன், போராடினேன், சட்டமன்றத்தில் பேசினேன், முதல்வரைச் சந்தித்து முறையிட்டேன்”

திருமா

“அ.தி.மு.க ஆட்சியைவிட, தி.மு.க ஆட்சியில் கமிஷன் பிரச்னை அதிகமாகியிருப்பதாகச் சொல்லப்படுவது குறித்த உங்கள் பார்வை என்ன?”

“ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் நேரடியாகத் தலையிட்டுக் கேட்பதுபோல எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதிகாரிகள் கண்டிப்பாக அதனைச் செய்கிறார்கள். கடந்த ஆட்சியில் செய்த அதே தவறுகளை, இப்போதும் அதிகாரிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே பேசியிருக்கிறேன்”

“எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் நடக்கும் பிரச்னைகள் பற்றி உங்கள் கருத்து?”

“எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவுக்குப் பிறகு லட்சோப லட்சம் தொண்டர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வலிமை மிக்கத் தலைவர்கள் இன்றில்லை என்பது நிதர்சனம். எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா மூவராலும் அவர்களின் இடத்தை நிரப்பமுடியாது”

தி.மு.க கூட்டணி

“தி.மு.க ஆட்சியின் இந்த ஓராண்டில் என்ன நடந்தாலும், கூட்டணிக் கட்சிகள் ஏன் மௌனியாக இருக்கிறீர்கள்?”

“மற்றக் கட்சிகளைப் பற்றி எனக்குத் தெரியாது. சட்டமன்றக் குறிப்பை எடுத்துப் பார்த்தீர்களானால், எல்லா விஷயங்களுக்கும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறேன். இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு இஸ்லாமிய கட்சிகளை விட, நான்தான் பேசியிருக்கிறேன். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பற்றி கவர்னர் விமர்சித்ததற்கு நான்தான் பேசினேன். ஓராண்டு காலத்தில் பாராட்டவும் செய்திருக்கிறேன், சுட்டிக்காட்ட வேண்டியதைச் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.. தட்டிக்கேட்க வேண்டியதையும் தட்டிக்கேட்டிருக்கிறேன். போராட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். இந்த ஆட்சி வந்தபிறகும் என்னுடையப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது”

“இந்த ஆட்சியலும் தினமும் போராட்டங்கள் நடக்கிறது. ஆட்சி சரியில்லை என்று அர்த்தமா?”

“அப்படியில்லை. மக்களுக்குச் சிலக் கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கிறது, அதற்காகப் போராடுகிறார்கள். அமைப்புகளும், இயக்கங்களும் தங்களுடையக் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல, ஜனநாயக முறையில் அங்கீகரிக்கப்பட்ட செயல் போராட்டம் மட்டுமே. போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் உரிமையைக் கேட்டு எல்லா ஆட்சியிலும் போராடத்தான் செய்கிறார்கள். ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என எல்லோருடையப் போராட்டமும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நடக்கத்தான் செய்யும். எந்த ஆட்சி என்பதெல்லாம் எங்களைப் போன்றப் போராட்டக்காரர்களுக்குக் கவலையில்லை”

வேல்முருகன்

“நீங்கள் பா.ம.க-வில் இருந்தபோது தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சி மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதற்கு என்ன காரணம்?”

“மக்கள் தொலைக்காட்சி, வன்னியர் அறக்கட்டளை உள்ளிட்டவைத் தொடங்கப்படுவதற்கு என்னைப்போன்ற லட்சக்கணக்கான வன்னிய மக்கள் கொடை அளித்தனர். வன்னியர்களுக்கானது என்று அறிவித்துவிட்டு, காலப்போக்கில் ராமதாஸ் அதனைக் குடும்பச் சொத்தாக மாற்றிய பிறகு, தங்களுடையப் பங்களிப்பை வன்னியர்கள் நிறுத்திக்கொண்டார்கள். இதுதான் காரணம். மக்கள் தொலைக்காட்சியையும் விற்று, அத்தொகையையும் தனதாக்கிக்கொள்ள முயற்சிக்கிறது ராமதாஸ் குடும்பம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.