கள்ளக்குறிச்சியில் மரணமடைந்த பள்ளி மாணவி உடல் இறுதிச் சடங்குக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது பெற்றோர் மட்டுமல்லாமல் ஊர் மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது காண்போரை கலங்கச் செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி கடந்த 12-ம் தேதியன்று பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த சூழலில், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 17-ம் தேதி அந்தப் பள்ளி முன்பு ஊர் மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. நேரம் செல்ல, கொந்தளிப்பான மனநிலையில் இருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட தொடங்கினர். பள்ளி வேன்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, கலவரத்தை அடக்குவதற்காக போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனிடையே, தங்கள் மகள் எப்படி இறந்தார் என தெரியாமல் உடலை வாங்க மாட்டோம் என மாணவியின் பெற்றோர் தெரிவித்து வந்தனர். மேலும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி, பிரேதப் பரிசோதனை செய்ததில் எந்த புதிய தடயமும் கண்டறியப்படவில்லை. ஆனால், மாணவியின் உடலை பெற பெற்றோர் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மாணவியின் உடலை பெற பெற்றோர் நேற்று சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். மாணவியின் உடலுக்கு அரசு சார்பில் மருத்துவமனையிலேயே அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிறகு இறுதி சடங்கு செய்வதற்காக, சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்துக்கு மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மயானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. பெற்றோர் மட்டுமல்லாமல் அவர்களின் உறவினர்களும், ஊர் மக்களும் மாணவிக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM