சென்னை: ” காவல்துறை பாதுகாப்பு மற்றும் முழு ஒத்துழைப்போடு அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, அங்குள்ள பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,” தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அவருடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், புகழேந்தி மற்றும் கீதா உள்பட ஓபிஎஸ் தலைமயில் 300 பேர் கொண்ட ரவுடிகள், சமூக விரோதிகள், குண்டர்கள் துணையோடு,கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். மக்கள் அனைவரும் இதை பார்த்தார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஜானகி இடையிலான பிரச்சினையின் போதுகூட இதே 145- 146 விதிகளின்படி கட்சி அலுவலகம் பூட்டப்பட்டபோதுகூட இதுபோல் யாரும் செல்லவில்லை. அப்போதுகூட அறவழியில்தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை கழகத்தின் ஆவணங்கள், விலை மதிப்பில்லாத பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்டு, ஓபிஎஸ் வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக, 11-ம் தேதியே ஆதிராஜராம் புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரின்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கெனவே கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு கொடுத்தார். ஆனால், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. கட்சி அலுவலகம் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, அங்குள்ள பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. இவை அனைத்தும் காவல்துறை முன்னிலையில், பாதுகாப்புடன் மற்றும் அவர்களின் முழு ஒத்துழைப்போடு நடந்துள்ளது.
அதிமுக அலுவலகத்தின் உள்ளே, அனைத்து அறைகளும் சூறையாடப்பட்டுள்ளன. அனைத்து கதவுகளும் உடைத்தெறியப்பட்டுள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறை உடைத்தெறியப்பட்டு, ஓபிஎஸ் உள்ளே சென்று அமர்ந்துள்ளார். இதை செய்ய எப்படி அவருக்கு மனது வந்தது. ஓபிஎஸ்-க்கு இதை செய்ய எப்படி தைரியம் வந்தது.
இன்னமும் தன்னை அதிமுக தொண்டன் எனக் கூறுவதற்கு அவருக்கு வெட்கமாக இல்லையா?
அலுவலகத்தில் இருந்த அனைத்துப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிமுக அலுவலகத்தின் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளார். சென்னையில் அதிமுகவுக்கு சொந்தமான இடங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அதிமுகவுக்கு சொந்தமான அனைத்து ஆவணங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்” என்று அவர் கூறினார்.