திருவனந்தபுரம்: வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோயான குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி கண்டறியப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரண்டாவதாக, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த திங்கட்கிழமை குரங்கு அம்மை உறுதி செய்யப் பட்டது. இந்நிலையில் 3-வது நபராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையில், வயநாட்டில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நேற்று கண் டறியப்பட்டது இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறும் போது, “வயநாட்டில் ஒரு பண்ணையில் 5 பன்றிகள் இறந்ததை தொடர்ந்து, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு உள்ள இடம் மற்றும் 2 கி.மீ. சுற்றுப் பகுதிகளில் உள்ள பன்றிகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது” என்றார்.