`அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் `களக்காத்தா சந்தணமேரா…’ என்ற பாடலை பாடிய நஞ்சியம்மா-வுக்குச் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நஞ்சியம்மா உருவாக்கிப் பாடிய இந்த நாட்டுப்புறப் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்திருந்தார். இந்தப் பாடலுக்காக 2020-ல் கேரள மாநில சினிமா விருதும் நஞ்சியம்மாவுக்கு வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயியான நஞ்சியம்மாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்குக் கேரளமே வாழ்த்துகள் தெரிவித்து வருகிறது.
பழங்குடியின கலைஞரான அட்டப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆஸாத் கலாசங்கத்தில் உறுப்பினராக உள்ளார் நஞ்சியம்மா. விவசாயப்பணி, ஆடு, மாடுகள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளுடன் நஞ்சியம்மாள் பாடல்களை தன் உயிராக நேசித்து வருகிறார்.
தேசிய விருது அறிவிக்கப்பட்டது பற்றி நஞ்சியம்மாவிடம் பேசினோம். “விருது கிடைத்தது எனது மனதிற்குத் திருப்தியாக உள்ளது. எனக்கு இப்படி ஒரு விருது கிடைப்பது சந்தோஷம்தான். எல்லா ராஜ்ஜியத்து மக்களும் என்னுள் உண்டு. அவர்கள் மனதில் நான் உண்டு. நம் நாடு நன்றாக வளரட்டும், முன்னேற்றப் பாதையில் போகட்டும்.
ஒரு பாட்டை நான் பாடினேன். அது சச்சி சாருக்கு (மறைந்த இயக்குநர் சச்சிதானந்தன்) பிடித்துவிட்டது. சினிமாவில் பாடச்சொன்னபோது எனக்குப் பழக்கம் இல்லை என்று தயங்கினேன். ஆனால், சச்சி சார் எனக்குத் தைரியம் கொடுத்து சினிமாவில் எனது குரலை ஒலிக்க வைத்தார். நிறைய அவார்டுகள் கிடைத்தன.
சச்சி சார்தான் என்னை வெளியுலகுக்குக் கொண்டுவந்து இந்த நாட்டையும், மக்களையும் பார்க்கவைத்தார். ஆனால், அவர் இப்போது உலகத்தைவிட்டுப் போய்விட்டார். இந்த விருது அறிவித்த சமயத்தில் சச்சி சாரின் முகத்தைதான் நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் இறக்கும்வரை சினிமாவில் எனது பங்களிப்பு இருக்கும். எல்லா மக்களுக்கும் இதுபோன்ற விருதுகள் கிடைக்கட்டும். மக்கள் சந்தோஷமாக இருக்கட்டும்” என்றார்.
இதே `அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் இயக்குநர் சச்சி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 18 அன்று இதயப் பிரச்னை காரணமாக மறைந்தார். இந்த விருது அறிவிப்பைத் தொடர்ந்து பலரும் இயக்குநர் சச்சிக்கு இணையத்தில் புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.