சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர உலக நாடுகளுக்கு அழைப்பு!

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும்.

இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டு செயற்குழுவின் இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது.

பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி வு-ஜியாங்ஹாவ் ஆகியோர் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் 60 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு (சீபெக்) புத்துயிர் அளித்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.சர்வதேச மற்றும் பிராந்திய இணைப்பை, குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு வலுப்படுத்துவதில் ‘சீபெக்’ சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் இணைய விரும்பும் எந்தவொரு சர்வதேச நாட்டையும் பொருளாதார கூட்டணியில் திறந்த மனதுடன் வரவேற்பதாக இருநாட்டு பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

ம்ேலும், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு முயற்சியை உருவாக்க பிராந்திய நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுவதால், இந்தியா சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது. இதனிடையே இந்த பேச்சுவார்த்தை முக்கியமாக பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.