சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வரும் 28 முதல் ஆக.10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை, விமானநிலைய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதி, தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, அதுகுறித்த விவரங்களை முதல்வரிடம் எடுத் துரைத்தார்.
அதேபோல, தொடக்க விழாநடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும், சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள், பேருந்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் மதிவேந்தனும் விளக்கினார்.
போட்டியை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, வரும் 28-ம் தேதி உள்ளூர்விடுமுறை அறிவிப்பது குறித்தும்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், செஸ் போட்டி குறித்து உலகெங்கும் உள்ள சதுரங்க ஆர்வலர்கள், போட்டியாளர்கள் மற்றும்பொதுமக்கள் தகவல் பெறும் வகையில், பிரத்யேக இணையதளம், செயலி உருவாக்கப்பட்டு வரும் விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்தார்.
பின்னர், ‘‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தும்வகையில், பல்வேறு நாடுகளில்இருந்து வரும் போட்டியாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், எவ்விதக் குறைபாடும்இல்லாமல் செய்துதர வேண்டும்.போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு தேவையான போக்குவரத்து வசதி, பார்வையாளர்கள் எவ்வித சிரமமுமின்றி போட்டியை காணத் தேவையான வசதி உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும்’’ என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறைச் செயலர்கள் நா.முருகானந்தம் (நிதி), அபூர்வா (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு), செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் தாரேஸ்அகமது, செய்தித் துறை இயக்குநர்வீ.ப.ஜெயசீலன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் கே.பி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.