டெல்லி: இந்திய நாட்டின்15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு பெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் போட்டியில், பாஜக கூட்டணி சார்பில், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடந்தது. இந்த தேர்தலில் 771 எம்பிக்கள் மற்றும் 4025 எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 99% மேல் வாக்குப்பதிவு பதிவானது. இதில் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டியில் அடைக்கப்பட்டு சீல் வைத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 21ம் தேதியன்று காலை எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில் திரௌபதி முர்மு 70%-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று, இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஜூலை 25-ம் பதவியேற்க உள்ளார். புதிதாக தேர்வான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-க்கு, எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தை கூறினார். ஈபிஎஸ் உடன் தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.