இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அங்கீகரிப்பதற்காக, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, தகவல் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து, தகவல் திணைக்களத்தின் புதிய செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இவான் ஜான் உய் (அமைச்சர்) ஐ சந்தித்தார்.
தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர், தொழில்நுட்ப சட்டம், கணினி தடயவியல், இணையப் பாதுகாப்பு, மின்-வணிகம், டிஜிட்டல் நெறிமுறைகள் போன்றவற்றில் நிபுணரான செயலாளர் உய், பொது மற்றும் தனியார் துறையில் விரிவான அனுபவம் கொண்டவர். 2022 ஜூன் 30ஆந் திகதி புதிய நிர்வாகம் பதவியேற்றவுடன் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறை செயலாளராக அவர் பொறுப்பேற்றார்.
கூட்டத்தில் எரையாற்றிய தூதுவர் குணசேகர, குறிப்பாக மின்-அரசு, மின்-வணிகம், வணிக செயன்முறை வெளிச்சேவை மற்றும் மென்பொருள் அபிவிருத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பலம் மற்றும் திறன்களை பூர்த்தி செய்ய முடியும் வகையிலான தகவல் தொழில்நுட்பத் துறையில் பிலிப்பைன்ஸுடன் ஒத்துழைக்கும் வகையிலான இலங்கையின் ஆர்வத்தை விளக்கினார். பிலிப்பைன்ஸின் டிஜிட்டல் மயமாக்கல் உந்துதலுக்கு ஏற்ப, இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறையினர் தமது சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கும், தமது வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும், பிலிப்பைன்ஸில் தமது இருப்பை நிலைநிறுத்துவதற்கும் அதிகரித்து வரும் ஆர்வத்தை அவர் விரிவாகக் கூறினார்.
பிலிப்பைன்ஸிற்கு வணிக விஜயம் மேற்கொண்டு தற்போது பிலிப்பைன்ஸுக்குச் சென்றுள்ள பிலீட்டா பிரைவேட் லிமிடெட்டின் சஞ்சி டி சில்வா மற்றும் ஹெச்செனிட் குரூப் ஒஃப் கம்பனியின் தினேஷ் சபரமாது ஆகிய இரண்டு இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொழில்துறை சார்பில் பேசுகையில், இலங்கை வழங்கும் புதுமையான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகள் குறித்து தொழில்முனைவோர் கலந்துரையாடினர்.
இத்துறையில் இலங்கையுடன் மேலும் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு செயலாளர் உய் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அவரைப் பொறுத்தவரை, ஜனாதிபதி பெர்டினாண்ட் ரோமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியரின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், பிலிப்பைன்ஸின் புதிய நிர்வாகம் அதன் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையானது பிலிப்பைன்ஸில் பல்வேறு துறைகளில் ஏற்கனவே தனது பிரசன்னத்தை ஏற்படுத்தியுள்ளது. எஃப்.பி.சி. ஆசியா பசிபிக், டெக் ஒன் குளோபல், ஹெச்செனிட் குரூப், பிலீட்டா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்து நாட்டின் பெரிய நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வகையில் தமது செயற்பாடுகளை நிறுவியுள்ளன.
இந்தத் தொழிலில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாடுகளை மேலும் விரிவுபடுத்தும் இலக்குடன், இணைப்புக்களை விரிவுபடுத்துவதற்கும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் தளத்தை வழங்கும் முகமாக, பிலிப்பைன்ஸின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயன்முறை சங்கம், இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கம் போன்ற தொடர்புடைய பங்குதாரர்களிடையே தொடர்புகள், உரையாடல்கள் மற்றும் அறிமுகங்களை தூதரகம் எளிதாக்குகின்றது.
மேலும், பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட பி.பி.எம். நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்பம்-பி.பி.எம். இலக்காக இலங்கையை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளில், எமாப்டா போன்ற வெளிநாட்டு பி.பி.எம். நிறுவனங்களின் நுழைவை தூதரகம் எளிதாக்கியுள்ளது. கொழும்பு ரீகனெக்சன்ஸ் ரோட்டரி கழகம் மற்றும் மகதி நண்பர்கள் வட்ட ரோட்டரி கழகம் மூலம் செயற்படுத்தப்படவுள்ள ஐந்நூறு (500) இலங்கைப் பயனாளிகளுக்கான தகவல் தொழில்நுட்ப புலமைப்பரிசில் திட்டத்திற்காக தூதரகம் அண்மையில் பிலிப்பைன்ஸின் சர்வதேச கல்வி உலகளாவிய கல்லூரிகள் இன்க் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இலங்கைத் தூதரகம்,
மணிலா
2022 ஜூலை 22