திருச்சியில் மூதாட்டி உயிரை பலி வாங்கிய பாதாள சாக்கடை குழி: மக்கள் கொந்தளிப்பு; அமைச்சர் சமரசம்

திருச்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்கள் எங்கும் நிம்மதியாக சென்று வரமுடியாத அளவுக்கு மேடுபள்ளங்கள் நிறைந்ததாகவே சாலைகள் இருக்கின்றன. மழைக்காலங்களில் வழுக்கி விழுந்து பலர் மருத்துவமனைக்கு சென்ற நிகழ்வுகளே அதிகம். இதனால் பெரும்பாலானோர் மாநகராட்சி மீது அதீத வருத்தத்திலும், எரிச்சலிலுமே இருக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர், பகவதிபுரம் குட்செட்ரோடு அருகே பாதாள சாக்கடைக்கு உந்து நிலையம் அமைக்கும் பணிக்காக குழி தோண்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால் அந்த பாதாள சாக்கடை நீர் உந்து நிலையத்திற்கான குழியை  முறையாக பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்காமல் விட்டுவிட்டனர்.

இதன் விளைவாக இன்று (ஜூலை 23) காலை ஒரு மூதாட்டி இயற்கை உபாதை கழிப்பதற்காக செல்லும் போது தவறி அந்த கழிவுநீர் குழியில் விழுந்து மூழ்கி இறந்துவிட்டார். இதனை அறிந்து உடனடியாக அங்கு வந்த மூதாட்டியின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் DYFI-CPI(M)-மமக இணைந்து கழிவு நீர் தொட்டியைக் கட்டி மூடப்படாமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்ட L&T நிர்வாகத்தை கண்டித்தும் மரணமடைந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மூதாட்டியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் இரவு பகலாக இந்த பாதாள சாக்கடை நீர் உந்து நிலையத்தினை கட்டி முடிப்போம். அதுவரை சுற்றி வேலி அமைத்து காவலர் நியமித்து இரவு நேர விளக்கு எரிய விட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததனர்.

அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து மூதாட்டியின் உடலை பார்த்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் மூலமாக இழப்பீடு தொகை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து மூதாட்டியின் உடலைப் பெற்றுக்கொள்வது என்று கூறி போராட்டம் கைவிடப்பட்டது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட செயலாளர் லெனின் தெரிவித்தார். மேலும் இதுபோல் சம்பவங்கள் மாநகராட்சியில் மீண்டும் வேறு எங்கும் நடைபெறாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து துரித நடவடிக்கை எடுத்து நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

க. சண்முகவடிவேல் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.