தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா : சூர்யா, அபர்ணா, ஜி.வி.பிரகாஷிற்கு விருது

புதுடில்லி : 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகர் (சூர்யானு, நடிகை (அபர்ணா பாலமுரளி), பின்னணி இசை, படம், திரைக்கதை உள்ளிட்ட 5 விருதுகளை ‛சூரரைப்போற்று' படம் வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக வசந்த் இயக்கிய, ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் தேர்வாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ் படங்கள் மட்டும் 10 விருதுகளை வென்றுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப் போனது. 2020ம் ஆண்டில் கொரோனா தாக்கம் வந்து தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், வழக்கத்தை விட குறைவான படங்களே வெளிவந்தன. அவற்றோடு புதிதாக ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான படங்களும் உள்ளன. இந்நிலையில் 2020ம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய அறிவிப்பை டில்லியில் வெளியிட்டனர்.


5 விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று

சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி,பிரகாஷ் இசையமைத்தார். இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில், இந்த படம் சிறந்த நடிகர்(சூர்யா), நடிகை(அபர்ணா பாலமுரளி), படம், பின்னணி இசை(ஜிவி பிரகாஷ்) மற்றும் திரைக்கதை(சுதா) என 5 தேசிய விருதுகளை அள்ளியது.


வசந்த் சாய் படத்திற்கு 3 விருது

இயக்குனர் வசந்த் சாய் இயக்கிய ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மொழி வாரியாக தேர்வான படங்களில் சிறந்த தமிழ் படமாக தேர்வாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு சிறந்த துணை நடிகை(லட்சுமி பிரியா) மற்றும் சிறந்த எடிட்டர் (ஸ்ரீகர் பிரசாத்)-க்கான விருதும் பெற்றது.

மண்டேலாவுக்கு 2
அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா படம் டிவியில் நேரடியாக வெளியானது. இந்த படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் அறிமுக இயக்குனருக்கான 2 விருதுகள் கிடைத்துள்ளன.

தேசிய விருதுகள் விபரம் வருமாறு :

சிறந்த தமிழ் படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த படம் : சூரரைப்போற்று

சிறந்த நடிகர்கள் : சூர்யா (சூரரைப்போற்று), அஜய் தேவ்கன் (தன்ஹாஜி அன் சங் வாரியர்)

சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)

சிறந்த இயக்குனர் : சாச்சி (அய்யப்பனும் கோஷியும்)

சிறந்த அறிமுக இயக்குனர் : மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த துணை நடிகர் : பிஜூ மேனன் (அய்யப்பனும் கோஷியும் – மலையாளம்)

சிறந்த துணை நடிகை : லட்சுமி பிரியா (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ஜிவி பிரகாஷ் (சூரரைப்போற்று)

சிறந்த திரைக்கதை : சுதா கொங்கரா – ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)

சிறந்த எடிட்டர் : ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த இசையமைப்பாளர் : தமன் (அலவைகுந்தபுரம் – தெலுங்கு)

சிறந்த வசன அமைப்பு : மடோன் அஸ்வின் (மண்டேலா)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.