சென்னை: நீட் மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. இந்த மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பது உள்ளிட்ட பதில்களை மத்திய அரசுக்கு வழங்க இருக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இம்மசோதா மத்திய சுகாதாரத் துறை, ஆயுஷ் அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டு, அந்த அமைச்சகங்களின் குறிப்புகளுடன் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.
இந்த கடிதம் கடந்த 5-ம் தேதிதமிழக சட்டத் துறைக்கு வந்தது.அதில் பல்வேறு கருத்து, கேள்விகள் உள்ளன. மசோதா மாநில சட்டப்பேரவை அதிகார வரம்புக்கு மீறியதாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது
. மருத்துவ கல்வியை உள்ளடக்கிய 7-வது அட்டவணையின் பட்டியல் 3,பதிவு 25-ன்படி கல்வி நிறுவன சேர்க்கை தொடர்பான சட்டங்களை உருவாக்கும் சட்டம் இயற்றும் தகுதி மாநில சட்டப்பேரவைக்கு உள்ளது. எனவே, இந்த ஆட்சேபம் அடிப்படையற்றது.
கல்வியின் தரம், ஒருங்கிணைப்பு ஆகியவை மாநிலத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது என்ற உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கி உள்ளது.
மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களின் சேர்க்கை முறையை கட்டுப்படுத்த இயலாது. இவற்றில், மாநில அரசுக்கு சட்டம் இயற்றுவதற்கும் அதிகாரம் உள்ளது.
ஒரு சட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே முரண்பாடு இருந்தால்குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அந்த முரண்பாடு களையப்படும். எனவே, மாநில சட்டப்பேரவைக்கு மசோதாவை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளது.
நீட் தேர்வு முறையே இல்லாமல், பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அவற்றுக்கு இணையான தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவ சேர்க்கை உறுதிப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் பல்வேறு தேர்வு எழுதுவதை குறைத்து, அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்குஉதவுகிறது.
நீட் மசோதா நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பது முற்றிலும் ஏற்க இயலாத வாதம். இவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தமசோதா வேறு ஒரு மாணவர் சேர்க்கை முறையை பின்பற்றுவதால் அரசமைப்பு சட்ட பிரிவு 14-ஐ மீறுவது ஆகாதா என கேட்டுள்ளது.
மதிப்பெண்களின் அடிப்படையிலான சேர்க்கை முறை, வேறு எந்த ஒரு சேர்க்கை முறையைவிடவும் நியாயம், சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால், அரசமைப்பு சட்டத்தை மீறுகிறது என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது.
இந்த மசோதா தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என மத்திய அரசு கேட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை பன்முகதன்மைக்கு எதிரானதாக உள்ளது.கூட்டாட்சி தத்துவம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒருபகுதி என நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய கல்விக்கொள்கை, மாநில சட்டப்பேரவைக்கு வழிகாட்டும் காரணியாக இருக்க முடியாது. மாநில சட்டப்பேரவைக்கு உயர் கல்வி குறித்து சட்டம் இயற்ற முழு அதிகாரம் உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தி உள்ளது. மாநில அரசின் மசோதா கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சமமான, நியாயமான வாய்ப்பை வழங்குகிறது.
மத்திய அரசின் கேள்விகளுக்கு தமிழக சட்டத்துறை பல விளக்கங்களுடன் சட்டரீதியான பதில்களை தயாரித்துள்ளது. இந்த பதில் ஓரிரு நாளில்சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.