இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பயணத்தை ரத்து செய்ய விரும்புவோர், ஐஆர்சிடிசி இணையதளத்திலேயே ரத்து செய்து பணத்தை திரும்ப பெறலாம்.
இதில், மற்ற வங்கிகளின் சார்பில் செய்யப்படும் கட்டண பரிவர்த்தனையை விட, ஐஆர்சிடிசி-க்கு சொந்தமான ‘ஐபே’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, ரத்து செய்தால், பணம் தாமதம் இன்றி கிடைக்கும்.
இது குறித்து, ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: ‘வங்கிகளின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்வதால் பணம் திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. சில வங்கிகளில் பணத்தை திரும்பப் பெற இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகி விடுகின்றன.
எனவே, பயணிகளுக்கு முடிந்த வரையில் விரைவாக பணத்தை திரும்ப பெறும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் அதன் செயலியில் ‘ஐபே’ எனும் புதிய வசதி உள்ளது. இருப்பினும், பயணிகளுக்கு இது குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை.
ஐஆர்சிடிசி-க்கு சொந்தமான ‘ஐபே’ மூலம் டிக்கெட் ரத்து செய்யும் போது, ஒன்று முதல் மூன்று நாட்களில் பணத்தை திரும்ப பெறலாம். மற்ற வங்கிகளின் பரிவர்த்தனைகளை ஒப்பிடுகையில், பயணியருக்கு தாமதம் இன்றி பணம் திரும்ப கிடைக்கும்.
இந்த நடைமுறையை பயன்படுத்தி, ரயில்வேயில் இருந்து பேசுவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக, புகார்கள் வந்துள்ளன. எனவே, பயணியர் உஷாராக இருக்க வேண்டும்.
ரயில்வே துறையில் இருந்து பேசுவதாக கூறி, உங்களுடைய டெபிட் , கிரெட் கார்டு, யுபிஐ, ஸ்கேன் கோடு விவரம் கேட்கும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.