சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்களை மீட்க, தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர், சிவாஜி நகரில் உள்ள ஆர்ட் வில்லேஜ் என்ற கடையில் பழங்காலசிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீஸாருக்குத் தகவல் கிடைத் தது.
அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக கூடுதல் எஸ்பி மலைச்சாமி, டிஎஸ்பி கதிரவன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடை பெற்றது.
இதில், ஆர்ட் வில்லேஜ் கடையின் உரிமையாளர் கணபதி, ஏற்கெனவே 2017-ல் சில சிலைகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் அனுப்பியதும், ஆனால், சிலைகளின் தொன்மையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆர்ட் வில்லேஜுக்கு சென்ற போலீஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமாள், ரிஷபதேவர் (3), ரிஷப தேவ அம்மன், சிவகாமி அம்மன் (2), அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், குட்டி நந்தி, மகாவீரர், கலிங்க கிருஷ்ணர், நடன அம்மன் ஆகிய 14 பழங்கால சிலைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அங்கிருந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், ஆர்ட் வில்லேஜ் உரிமையாளர் கணபதியிடம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்தசிலைகள் எந்தெந்த கோயில்களுக்குச் சொந்தமானது எனவும், சிலைகள் யாரால் கடத்தப்பட்டது என்பது குறித்தும், சிலைகளின் தொன்மை குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அதன் உண்மையான மதிப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.