உத்தரப்பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் விரைவுச் சாலைக்குக் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 28 மாதங்களில் சாலைப்பணிகள் முடிவடைந்து கடந்த ஜூலை 16-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்த விரைவுச்சாலையால், சித்ரகூட் பகுதியிலிருந்து டெல்லி செல்வதற்கான பயண நேரம் 3-4 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது, அதைவிட இந்த சாலையால் அதிக பலன் ஏற்படும். இந்த விரைவுச்சாலை, வாகனங்கள் அதிக வேகத்தில் செல்ல வகை செய்வதோடு மட்டுமின்றி, புந்தேல்கண்ட் முழுவதும் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும்” என்றார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழையால் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புந்தல்கேட் சாலை ஒரே வாரத்தில் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. ஒரே ஒரு கனமழைக்கே சாலை தாங்கவில்லையா? என அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க வின் வருண் காந்தி, “ரூ15,000 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த விரைவுச் சாலை, 5 நாள்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை . அப்படியானால் இந்த விரைவுச்சாலையின் தரம்தான் என்ன? இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “முடிவடையாத திட்டங்களை முடித்ததாகக் காட்டியுள்ளதற்கு இது ஒரு உதாரணம். புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை மிகப் பெரிய மனிதர்கள்தான் திறந்து வைத்தனர். ஆனால் ஒரே ஒரு வாரத்திலே ஊழல் குழிகள் வெளியே வந்துவிட்டன. நல்லவேளை இதில் விமான ஓடுபாதைகளை அமைக்கவில்லை” என அதன் படங்களையும் இணைத்துள்ளார்.