ஹன்சிகாவின் 40வது படமான ‘மஹா’ ஜூலை 22ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சிலம்பரசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்தப் படத்தை U R ஜமீல் இயக்கியிருந்தார். படம் வெளியாகி நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் தற்போது இந்தப் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் U R ஜமீல்.
‘மஹா’ படம் உருவான சமயத்திலேயே இயக்குநர் ஜமீல் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இடையே பல பிரச்சனைகள் நடந்தது. மேலும் இயக்குநர் இல்லாமலேயே இப்படத்தின் வெளியீட்டு வேலைகளும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது.
தற்போது இப்படம் குறித்தும் அது வெளியடப்பட்டது குறித்தும் அதிருப்தியான கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் U R ஜமீல். “இது தோல்வியல்ல… முழுமை பெறாத வெற்றி. சில கதைகளை நீங்கள் படமாக்கியாக வேண்டும் எனத் தோன்றும் அபப்டியான படம் மஹா. ஏழரை வருடங்களுக்கு முன் இந்தக் கதையை எழுதினேன். 5 வருடங்களுக்கு முன் இப்படத்தை இயக்க ஒப்பந்தமானேன். ஆனால் அந்தப் பயணத்தில் இருந்து நான் துரதிர்ஷ்டவசமாக வெளியேறும் சூழல் உருவானது. எனக்கும் தயாரிப்பாளருக்குமான பிரச்சனை நீங்கள் அறிந்ததே. அதைப் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. இப்படத்தை சரியாக உருவாக்க கடைசி வரை போராடினேன். ஒன்றரை வருட போராட்டத்தில் நான் கற்றுக் கொண்டது உண்மை துணிவு மட்டும் வைத்து போராட்டத்தில் வெல்ல முடியாது என்பதைதான்.
இந்த நேரத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரின் ரசிகர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் இப்படம் சம்பந்தப்பட்ட செய்தி வெளியாகும் போதெல்லாம் உற்சாகம் அளித்தார்கள். ஒரு படத்தின் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அந்தப் படம் எனக்குத் தெரியாமலே அது வெளிவருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் இயக்குநர் தான் கேப்டன் ஆஃப் த ஷிப். ஆனால் அந்த கேப்டனும் ஆடியன் போல படம் எப்படி வருகிறது என்று காத்திருப்பது வருத்தமானது.
துரதிர்ஷ்டவசமாக இந்தக் கனவை நான் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் மஹா’வுடனான பயணம் வாழ்வில் மறக்க முடியாதது. சீக்கிரமே தயாராகிக் கொண்டிருக்கும் என்னுடைய அடுத்த படத்தை அறிவிப்பேன். ஆனால் அதற்கு முன் மஹா’வின் அதிகாரப்பூர்வ வெர்ஷனை வெளியிடுவேன். அதாவது ‘மஹா’ டைரக்டர்ஸ் கட்!” என்று கூறியிருக்கிறார் ஜமீல்.
– ஜான்சன்