புதுடெல்லி: இதுவரையில் இல்லாத வகையில், காவிரி ஆணையத்தின் கூட்டம் நேற்று 25 நிமிடத்தில் முடிந்தது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் கூட்டத்தில் மேகதாது குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. டெல்லியில் இந்த மாதம் முதல் வாரத்தில் நடக்க இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணை திட்டம் குறித்த விவாதத்தை நடத்தும்படி கர்நாடகா விடுத்த கோரிக்கையை, ஆணையத்தின் தலைவர் ஏற்றதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இதை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி எதுவும் விவாதிக்க கூடாது என்று உத்தரவிட்டது.இந்த பரபரப்பான சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்கினார். தமிழகத்தின் சார்பாக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதுவை, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், நீர், மழை தரவுகள், நிதிநிலை, நிர்வாகம், அலுவலக கட்டிடங்கள், காவிரி அணைகளில் இருந்து தற்போது வரையில் திறந்து விடப்பட்டுள்ள நீரின் புள்ளி விவரங்கள், உபரி நீர் கணக்கீடு, முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழுவில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. காலை 11.30 மணிக்கு துவங்கிய கூட்டம், 25 நிமிடத்தில் முடிந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மேகதாது குறித்து இதில் விவாதம் நடைபெறவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து, 25 நிமிடத்தில் இதன் கூட்டம் முடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.