முதுமையும் மூட்டுவலியும்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மூட்டுவலி எதனால் வருகிறது? அது வருவதற்கு எதாவது காரணம் உண்டா?

இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடமே மூட்டாகும். அங்கு ஜவ்வு போன்றதோர் உறுப்பு உள்ளது. அது தேயும் போது மூட்டிலுள்ள இரண்டு எலும்புகள் ஒன்றுக்கொன்று உராயும் போது வலி தோன்றுகிறது. பெண்களுக்கு சுமார் 55 வயதிருந்தே இத்தொல்லை நேரலாம்.

காரணங்கள்

  • மரபு

இத்தொல்லை பொதுவாகப் பெண்களுக்கு தலைமுறை தலைமுறையாக வருவதுண்டு. அதனால் மூட்டுவலி பரம்பரை நோயாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

  • முதுமை

வயது ஆக ஆக மூட்டுவலி வர வாய்ப்புகள் அதிகமாகிறது. மூட்டுகளில் இருக்கும் ஜவ்வில் பல ஆண்டுகளாய் செய்யும் வேலைச்சுமை காரணமாய் ஏற்படும் தேய்மானத்தால் வலி தோன்றுகிறது. ஆகையால் முதுமையும் மூட்டுவலிஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

  • உடற்பருமன்

அதிக எடை உள்ளவர்களுக்கு அந்த எடையைத் தாங்கும் முழங்கால், இடுப்பு போன்ற மூட்டுகளில் இத்தொல்லை அதிகமாக ஏற்படும்.

  • மூட்டுகளுக்கு கொடுக்கும் வேலைச்சுமை

மிகுந்த உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்பவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் மூட்டுவலி வர வாய்ப்புண்டு. உதாரணம்: கால் பந்து விளையாடுபவர்களுக்கு முழங்காலும், கூடைப் பந்தாடுபவர்களுக்கு தோள் பட்டையிலும் வலி ஏற்படும்.

Representational Image

மூட்டுத் தேய்மானத்தால் ஏற்படும் முதல் அறிகுறி என்ன ?

இந்நோயினால் முழங்கால், இடுப்பு, முதுகுத் தண்டு மற்றும் கழுத்துகளின் மூட்டுகள் மிகுதியாய்ப் பாதிப்புள்ளாகும். முதலில் மூட்டு வலி விட்டுவிட்டுத் தோன்றும். படிக்கட்டு ஏறும்போதும் தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்து எழும்போதும் முழங்கால் வலி மிகுதியாய் ஏற்படும். காலையில் படுக்கையிருந்து எழும்போது மூட்டுகள் சற்று இறுக்கமாய் இருக்கும். முழுங்காலை மடக்கி நீட்டும் போது ஒருவித சப்தமும் உண்டாகும். இடுப்பு, முழங்கால்களில் வலி மிகுதியாய் இருந்தால் நடை குறையும். தள்ளாடி கீழே விழவும் நேரிடலாம். நாள்பட்ட வலியினால் மனம் சோர்வு அடையும். இரவில் துாக்கம் பாதிக்கும்.

இந்நோய் கழுத்திலுள்ள மூட்டுகளைத் தாக்கும் பொழுது (cervical spondylosis) கழுத்தின் அசைவு குறைந்து, பின்புறம் வலி தோன்றும். இவ்வலி கழுத்தை அசைக்கும் போது தோள்பட்டைக்கும், கைகளுக்கும் பரவிச் செல்லும். மேலும் கழுத்தினை பக்கவாட்டிலும் மேலும் கீழும் திருப்பும் பொழுதும் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் மயக்கம் ஏற்படும்.

இந்நோய் தண்டுவடத்தைத் தாக்கும் போது கை கால்களில் மரத்த உணர்ச்சி ஏற்பட்டு அவை வலிமை இழக்கும். நடை தள்ளாடும். இந்நோய் கீழ் முதுகிலுள்ள எலும்புகளைப் பாதிக்கும் பொழுது (lumbar spondylosis) குனிந்து நிமிரும்பொழுது முதுகுவலி அதிகமாகும். சில நேரங்களில் முதுகிலிருந்து இரண்டு கால்களுக்கும் வலி பரவிச் செல்லும்.

முதுமையில் தோன்றும் முழங்கால் மூட்டுவலி பூரணமாக குணமாக்க முடியுமா? அதற்கு ஏற்ற சிகிச்சை முறை எது மருந்தா? அறுவை சிசிச்சையா ?

தேய்மானத்தினால் மூட்டு வலி ஏற்படுவதால் மருந்துகள் மற்றும் மாற்று சிகிச்சைகள் மூலம் வலியை குறைக்க முடியுமே தவிர பூரணமாக குணப்படுத்த முடியாது. அத்தேய்மானம் அதிகப்படியாகாமல் பார்த்துக் கொள்ள சில சிகிச்சை முறைகள் உண்டு. அவை:

  • நடைப்பயிற்சி

அதிக எடையால் மூட்டு தேய்மானம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். ஆகையால் அதிக எடையுள்ளவர்கள் தகுந்த உணவுக்கட்டுப்பாடு மற்றும் தக்க உடற்பயிற்சி மூலம் எடையை குறைப்பது மிக அவசியம். மூட்டுவலி உள்ளவர்கள் இதில் சற்று தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஒரேயடியாக வலி மாத்திரையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது. மூட்டு வலியை குறைக்க உடற்பயிற்சி உதவும். நடக்கும் போதோ அல்லது வேறு உடற்பயிற்சியின் போதோ மூட்டுவலி அதிகரித்தால் உடற்பயிற்சி செய்யக்கூடாது. மேலும் யோகா மற்றும் நீந்துதல் ஆகியவை வலியை குறைக்கும் சிறந்த பயிற்சிகளாகும்.

Dr.V.S.Natarajan
  • வலிநிவாரணிகள்

மூட்டுகளில் தோன்றும் வலியைக் குறைக்க ஆஸ்பிரின், பாரசிட்டமால் போன்ற சாதாரண வலிதீர் மருந்துகளே போதுமானவை. இம் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையொடு எடுத்துக்கொள்வது நல்லது. எந்த வலிதீர் மருந்தும் உணவிற்குப் பின்புதான் உட்கொள்ள வேண்டும். வயிற்றில் புண் உள்ளவர் (Peptic ulcer) இதனை உட்கொள்ளக் கூடாது. வலிதீர் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட மருத்துவர் ஆலோசனையைப் பெறவேண்டும். வயிற்றில் ஒருவித எரிச்சல், வலி, பசி குறைதல், இரத்த வாந்தி ஆகியவற்றோடு மலம் நிறம் மாறிக் கருப்பாய்ச் சென்றால், வலி மாத்திரை ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டு உடனே அதனை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும். தொடர்ந்து வலிநிவாரணி மாத்திரைகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் பாதிப்பும் ஏற்படலாம். ஆகையால் வலி நிவாரணி மாத்திரையை தொடர்ந்து சாப்பிடக் கூடாது. மூட்டுகளின் அருகிலுள்ள தசை இறுக்கமாயிருப்பின், அவ்விறுக்கத்தைக் குறைக்க களிம்பும், சில மாத்திரைகளும் தேவைப்படும். பல ஆண்டுகளாய்த் தொடர்ந்து மூட்டுவலி இருப்பவர்க்கு மனச்சோர்வு’ (Depression) தோன்றும். இதற்கும் சிகிச்சை பெற்று பயனடையலாம்.

சிலருக்கு மனச்சோர்வு மாத்திரையினாலும் மூட்டுவலி குறையலாம்.

சில மாத்திரைகள் (chondroitin and glucosamine) மூட்டுவலியைக் குறைக்கச் சற்று உதவும். ஆனால் நோயின் மாற்றத்தில் எந்தவித மாறுதலும் இருக்காது. இம்மாத்திரையினால் பெரிய பக்கவிளைவுகள் இல்லை என்பது தான் இம்மாத்திரையின் சிறப்பு. ஆனால் விலை சற்று அதிகம்.

  • ஊசி மருந்து சிகிச்சை :

சிலருக்கு மூட்டிற்குள்ளேயே ஊசி மூலம் ஸ்டீராய்டு மருந்தினைச் செலுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் மூட்டுகளில் ஊசி போட்டுக் கொள்ளக் கூடாது. தாங்க முடியாத மூட்டு வலி உள்ளவர்களுக்கும், அறுவை சிகிச்சைக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தகுதி (fitness) இல்லதாவர்களுக்கும் இச்சிகிச்சை முறை உகந்தது.

  • இயன்முறை சிகிச்சை(Physiotherapy) :

இச்சிகிச்சை முறையில் பல பிரிவுகள் உள்ளன. உதாரணம் : பயிற்சிச் சிகிச்சை (exercise), மின் சிகிச்சை (electro therapy), மெழுகு ஒத்தடம் (wax treatment) முதலானவை. இயன்முறை சிகிச்சையின் சிறப்பு மூட்டிலுள்ள வலியைக் குறைப்பதாகும். தசை இறுக்கத்தையும் தளர்த்தி மூட்டுகளின் அசைவினையும் இவை மிகுதிப்படுத்தும். ஆரம்பநிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் இயன்முறை சிகிச்சை மூலம் தக்க பயடைய வாய்ப்புண்டு.

  • புதிய சிகிச்சை முறைகள்

ஸ்டெம் செல் சிகிச்சை முறை

இடுப்பில் எலும்பிலுள்ள மஜ்ஜையை (Bone marrow) ஊசி மூலம் எடுத்து அதை வலியுள்ள மூட்டில் ஊசி மூலம் செலுத்துவார்கள். இதில் அறுவை சிகிச்சை ஏதுமில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு வலியிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

Representational Image

செல் சிகிச்சை முறை (Platelet Rich Plasma)

இதுவும் புதிய சிகிச்சை முறையே. உடம்பிலுள்ள இரத்தத்தை எடுத்து அதை பாதிக்கப்பட்ட மூட்டில் செலுத்துவதன் மூலம் ஒரு சில ஆண்டுகளுக்கு வலி இல்லாமல் இருக்கலாம்.

அறுவை சிகிச்சை :

அறுவை சிகிச்சையில் பல வகைகள் உள்ளன :

  • ஆஸ்ட்டியட்டமி (Osfcotomy) : இச்சிகிச்சையின் மூலம் சீராக இல்லாத மூட்டுகளை சீர் செய்து, மூட்டினுள் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதின் மூலம் மூட்டுவலி குறையும். .

  • தேய்ந்த மூட்டின் ஒரு பகுதியை மட்டிலும் அகற்றிவிட்டு, செயற்கை மூட்டின் பகுதியை மட்டும் பொறுத்துவது (Partial joint replacement).

  • செயற்கை மூட்டை பொறுத்துதல் (Total joint replacement) :

எலும்புத் தேய்மானத்தை எக்ஸ்ரே மற்றம் ஸ்கேன் மூலம் உறுதிசெய்த பின்னர், அறுவை சிகிச்சையின் அவசியத்தை மருத்துவர் நோயாளி மற்றும் உறவினர்களிடம் விவரமாக எடுத்துரைப்பார். அவர்கள் சம்மதம் தெரிவித்த பின்னர் எலும்பின் வலிமையை அறிய ஸ்கேன் பரிசோதனை, உடலில் வேறு நோய்கள் உள்ளனவா என்ற அறிய இரத்த பரிசோதனை செய்வார். பின்னர் பொது நல மருத்துவர் மற்றம் இதய நல மருத்துவரின் சம்மதம் பெற்ற பின்னரே அறுவை சிகிச்சை செய்யத் தொடங்குவார். அறுவைச் சிகிச்சை செய்த ஒன்று அல்லது இரண்டு நாட்களிலேயே நடக்க வைத்து பின்னர் இயன்முறை சிகிச்சை அளித்து சுமார் 5 7 நாட்களில் வலியின்றி இல்லம் செல்லலாம். முடிந்தவரை இரண்டு முழங்காலுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. சிலர் ஒரு மூட்டிற்கு மட்டிலும் சிகிச்சை செய்து கொண்டு அடுத்த மூட்டிற்கு பின்னர் செய்து கொள்ளலாம் என்ற முடிவு எடுப்பார். வலி சற்று குறைய பலர் அடுத்த மூட்டிற்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே விட்டு விடுகின்றனர். பழுதடைந்த மூட்டை அகற்றிவிட்டு செயற்கை மூட்டைப் பொறுத்துவது (Total joint replacement) இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டிற்கு நல்ல பயன் அளிக்கும். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 90% முதியவர்களுள் 10 15 ஆண்டுகள் (சிலருக்கு வாழ்நாள் முழுவதும்) வலியின்றி நலமாக வாழ முடியும். அறுவை சிகிச்சை செய்த பின்னர் வெகு சிலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதுமுண்டு.

மூட்டுவலியில் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற முதியவர்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?

மூட்டுவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

உபகரணங்கள் கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்கள், மூட்டில் ஏற்படும் பளுவைக் குறைத்து, வலியைக் குறைக்க உதவும். இடுப்பு, முழங்கால் வலி உள்ளவர்கள் கைத்தடியை பயன்படுத்துவது நல்லது.

காலணிகள் தகுந்த காலணிகளை உபயோகப்படுத்தல் அவசியம். பாதத்திற்கு தகுந்தவாறு மெத்தான, மென்மையான, உயரம் அதிகம் இல்லாத காலணிகளை அணிவது நல்லது.

செய்யக்கூடாதவை

  • முழங்கால் மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் அமர்வதும், அடிக்கடி மாடிப்படி ஏறுவதையும் தவிர்க்கவும்.

  • கழுத்தில் வலி உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்கவும். மேலும் உயரம் அதிகமுள்ள தலையணையைப் பயன்படுத்தக் கூடாது.

  • முதுகுவலி உள்ளவர்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பயணம் செய்வது அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. மெத்தையில் படுத்து உறங்குவதை தவிர்த்தல் நல்லது. தரையிலோ அல்லது இரும்புக்கட்டிலோ படுத்துறங்க வேண்டும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.