மேற்குவங்காளம்: மந்திரியின் உதவியாளரான நடிகை வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பறிமுதல் – யார் இவர்?

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருப்பவர் பார்த்தா சட்டர்ஜி. இவர் இதற்கு முன்னதாக அம்மாநிலத்தின் கல்வித்துறை மந்திரியாக பணியாற்றி வந்தார். இவர் கல்வித்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமணத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அம்மாநிலத்தில் தற்போது கல்வித்துறை மந்திரியாக உள்ள பரீஷ் சந்திர அதிகாரி. இவரது மகள் அங்கிதா அதிகாரி.

இதற்கிடையே, மாநில அரசுப்பள்ளியில் அங்கிதா அதிகாரி 2018-ம் ஆண்டு ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தேர்வில் தன்னை விட குறைவான மதிப்பெண் எடுத்த அங்கிதா அதிகாரிக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு நபர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு ஆசிரியர் பணியில் இருந்து அங்கிதாவை நீக்கியது. மேலும், அவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டது முதல் வாங்கிய சம்பளத்தை முழுவதும் திரும்ப ஒப்படைக்கும்படி கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கை தொடர்ந்து மேற்குவங்காள ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

அந்த வகையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, சோதனையின் போது மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளரான அர்பிதா பானர்ஜியின் வீட்டில் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அர்பிதா பானர்ஜி வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடத்துள்ளார். அவர் தமிழ் படம் ஒன்றிலும் நடத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான நடிகை அர்பிதா பானர்ஜி வீட்டில் இருந்து ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.