கோவை புத்தக திருவிழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த அரங்கில் 2,50,000 தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. 10 நாள்கள் நடைபெறுகிற இந்த புத்தக திருவிழாவில் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கடந்தாட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடு காரணமாக ரூ.1,50,000 கோடியாக கடன் உயர்ந்துள்ளது. இதற்கு வட்டி மட்டுமே ஆண்டுக்கு ரூ.16,000 கோடி செலுத்த வேண்டியுள்ளது. நமக்கு தேவையான மின்சாரத்தில் 3இல் 1 பங்கு தனியாரிடம் அதிகம் விலை கொடுத்துதான் வாங்கி வந்தனர்.
சில அரசியல் கட்சிகள் மின் கட்டணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த விலையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடிய பாஜக-விடம், அவர்கள் ஆளும் கர்நாடகா, குஜராத்தில் மின் கட்டணம் எவ்வளவு என சொல்லிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுங்கள்.
அவர்கள் கர்நாடகாவிலும், குஜராத்திலும் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அப்படியே கேஸ், பெட்ரோல் – டீசல் விலைக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
அதேபோல அதிமுகவினரும் கேஸ் விலை, பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் மக்கள் பார்த்திருப்பார்கள். டெல்லியில் உள்ள எஜமானர்களுக்கு பயந்து அதுபோன்ற நிலையை கைவிட்டுள்ளனர். அதிமுக, பாஜக இயக்கங்கள் இரண்டும் ஒன்றுதான். சின்னங்கள் தான் வேறு. மின் கட்டணம் உயர்த்த எதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என்றவரிடம்,
‘மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த அழுத்தம் கொடுக்கவில்லை’ என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “2012, 2013, 2014 ஆண்டு அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 37 விழுக்காடு அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
கூடுதல் மின் உற்பத்திக்கு எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. யார் ஆட்சியில் மின்சார வாரியத்துக்கு கடன் உயர்ந்தது என்பது குறித்தும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வளவு பேசுபவர்கள் கேஸ் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்காக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. யாரைக் கண்டு பயப்படுகிறீர்கள் என்றும் அவரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.
கர்நாடகாவில் மின் கட்டணம் எவ்வளவு என அவர்களுக்கு தெரியுமா. யாருடைய நிர்பந்தம் அடிப்படையில் கடந்த ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டனர். இதற்கெல்லாம் பதில் சொல்லச் சொல்லுங்கள். அரசின் மீது கருத்து சொல்பவர்கள் உண்மை நிலையை அறிந்து பேச வேண்டும்.” என்றார்.