ரெய்டில் கட்டு கட்டாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்… மேற்குவங்க அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை!

மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, இதற்கு முன்பு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) அரசு நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக, பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.

அப்போது ரூ. 2000 மற்றும் ரூ. 500 நோட்டு கட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், அர்பிதா முகர்ஜியின் வளாகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், “இந்த தொகை WBSSC ஊழலின் குற்றத்தின் வருமானமாகச் சந்தேகிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

அமலாக்க இயக்குநரகம் மீட்ட பணம்

சட்டர்ஜியைத் தவிர, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சி ஆதிகாரி, எம்.எல்.ஏ மாணிக் பட்டாச்சார்யா மற்றும் பலர் மீதும் சந்தேகத்தின் அடிப்படையில் ED சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனை குறித்து, மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் ,”அமலாக்க இயக்குநரகத்தின் இந்த சோதனை நடவடிக்கை மத்திய பா.ஜ.க அரசு தனது அரசியல் எதிரிகளைத் தொல்லைப்படுத்த மேற்கொண்ட தந்திரம். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாகிகள் தின பேரணிக்குப் பிறகு இந்த சோதனை, திரிணாமுல் காங்கிரஸின் தலைவர்களைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஒரு முயற்சியே தவிர வேறில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இன்று கைது செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.