மழையின் கடவுளாக கருதப்படும் இந்திர தேவன் மீது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புகார் கொடுத்திருந்தது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் கோண்ட் மாவட்டத்தில் உள்ள ஜாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார் யாதவ். இவர் கடந்த சனிக்கிழமையன்று நடந்த மொத்த நிவாரணம் தொடர்பான கூட்டத்தின் போது இந்திர தேவன் மீது புகார் தெரிவித்து ஒரு கடிதத்தை கொடுத்திருக்கிறார். அதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அவரது புகார் கடிதத்தில், “போதிய மழை இல்லாத காரணத்தால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். ஆகவே இந்திர தேவன் மீது மாவட்ட மாஜிஸ்திரேட் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த கடிதம் தாசில்தாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த கடிதத்தை பிரித்து படித்துக்கூட பார்க்காத வருவாய்த்துறை அதிகாரி என்.என். வெர்மா அதனை அப்படியே மாஜிஸ்திரேட்டுக்கும் அனுப்பியிருக்கிறார். சமூக வலைதளங்களில் விவசாயியின் புகார் கடிதம் பகிரப்பட்டு வைரலானதும் விசாரணை நடவடிகை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதன்படி வருவாய்த்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, தனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது என்றும், இதுதொடர்பாக எதுவுமே என் கவனத்துக்கு வரவில்லை என்றும் ஒரே போடாக போட்டிருக்கிறார். புகார் கடிதத்தில் உள்ள சீல் போலியானது என்றும் கூறியிருக்கிறார். யாரோ இதனை இட்டுக்கட்டி பரப்பியிருக்கிறார்கள். அப்படி எந்த கடிதமும் வரவும் இல்லை. எவருக்குமே அது அனுப்பப்படவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, உத்தரபிரதேசத்தில் மழை இல்லாததால், மழைக் கடவுளை திருப்திப்படுத்த பல சடங்குகளை நாட விவசாயிகளும் மற்றவர்களும் கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM