நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கான நீதியையும் நஷ்ட ஈட்டையும் பெற்றவர்கள் பற்றிக் கேள்விப்படும்போதுதான், விளம்பரங்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஓர் உத்வேகமும் நுகர்வோர் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படிப்பட்டதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது சமீபத்திய வழக்கு ஒன்று.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நபருக்கு முன்பக்க தலையில் இருந்த முடி கொட்டிவிட்டது. ‘வழுக்கைத் தலையில் முடியை நட்டுவிட்டால், அது வளரும்’ என்ற தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்தவர், கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவழித்து முடியில்லாத தன் தலைப்பகுதியில் முடியை நடும் சிகிச்சையைச் செய்துகொண்டிருக்கிறார். இது நடந்தது 2014-ல். ஆனால், அந்த விளம்பரத்தில் சொன்னதுபோல முடி வளரவில்லை.
இதுபற்றி, அந்த நிறுவனத்திடம் முறையிட்டிருக்கிறார் அந்த நபர். ஆனால், அந்நிறுவனமோ அந்த நபருக்கு நிவாரணம் வழங்காததோடு அலட்சியமாகவும் நடத்தியிருக்கிறது. வெகுண்டெழுந்த அவர், சென்ற வருடம் கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி, முடியை நடுவதற்காக வாங்கிய தொகையுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ஒன்றரை லட்சமும், வழக்கு செலவான 10 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் 4 லட்ச ரூபாயை அந்த நிறுவனம், பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதுபற்றி, வழக்கறிஞர் கண்ணதாசன் பேசுகையில், ”இதை முறையற்ற வர்த்தக நடவடிக்கை என்போம். ஆங்கிலத்தில் ‘unfair trade practices.’ அதாவது, பொய்யான விளம்பரங்களைக் கொடுத்து மற்றும் நம்பவைத்து நுகர்வோர்களை ஏமாற்றுவது. மக்களை ஏமாற்ற வேண்டுமென்கிற நோக்கத்துடன் செய்கிற வணிகங்கள் அனைத்தும் unfair trade practices தான். அவர்களுக்கு, அறிவியல்பூர்வமாக இது முடியாது என்று தெரிந்தும், நுகர்வோர் நம்புவது போல விளம்பரப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு நுகர்வோர், நீதிமன்றங்களில் நியாயம் பெற முடியும்.
இதுவே, மூக்கு, மார்பகம் போன்ற மருத்துவம் சார்ந்த அறுவை சிகிச்சைகளுக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதால், இவை unfair trade practices கீழ் வராது. ஆனால், தலையில் முடி கொட்டுகிற ஆண்கள் அதுதொடர்பான மன உளைச்சலில் இருப்பார்கள்; அதற்கான தீர்வுகளைத் தேடுவார்கள் என்று திட்டமிட்டுச் செய்பவர்களை, நுகர்வோர் நீதிமன்றங்களில் நிறுத்தி நஷ்டஈடு பெறலாம். மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வுதான் தேவை” என்கிறார்.