புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, 4வது நாளாக இரு அவைகளும் நேற்றும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கிய நிலையில், விலைவாசி உயர்வு, அக்னிபாதை திட்டம், உணவுப்பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுவதால், முதல் 3 நாட்களும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில், கூட்டத் தொடரின் 4ம் நாளான நேற்று மாநிலங்களவை கூடியதும், மீண்டும் அமளி தொடர்ந்தது.அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டுமென விதிஎண் 267ன் கீழ் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட பல்வேறு எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால், இதனை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகள் ஏந்தி, அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். கடும் நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் எச்சரித்தும், அமளி தொடர்ந்ததால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை தொடங்கிய பிறகும் அமளி தொடர்ந்ததால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.இதே போல், மக்களவையில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டிக்கு எதிராக எம்பிக்கள் பதாகைகளை கொண்டு அமளியில் ஈடுபட்டனர். ‘ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனாவில் இருந்து குணமடைந்து திரும்பியதும் விலைவாசி விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாம்’ என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 4 நாட்களும் அமளி காரணமாக, மழைக்கால தொடரின் முதல்வார கூட்டத் தொடரில் எந்த முக்கிய அலுவல்களும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்றும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: பாதுகாப்பு துறை தொடர்பான நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்னிபாதை திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட விவகாரங்களைத் தவிர புதிதாக எந்த விஷயம் குறித்தும் கூட்டத்தில் பேச முடியாது என கூறப்பட்டதால், எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.அண்டார்டிக் மசோதா: நிறைவேறியது: அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான இந்திய அண்டார்டிக் மசோதாவை ஒன்றிய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, உரிய அனுமதியின்றி இந்தியர்கள் யாரும் அண்டார்டிகா செல்வதை தடுக்கிறது. மீறினால் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது.