ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடும் வெப்ப நிலை காரணமாக நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் உருகும் பல படங்கள் கவலையைத் ஏற்படுத்தி இருக்கின்றன. இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் உருகிய ரயில்வே சிக்னலின் புகைப்படம் ஒன்றை அந்நாட்டின் நெட்வொர்க் ரயில்வே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரயில் நிலையங்களின் கம்பிகள், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் சேதமடைந்ததால் இங்கிலாந்து முழுவதும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் ரயில்கள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று ட்விட்டரில் நெட்வொர்க் ரயில் பயணிகளுக்குத் தெரிவித்துள்ளது.
மேலும் நாள் முழுவதும் ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் எதிர்பார்க்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. ரயில் பயணிகள் தங்கள் ரயில் நிலையத்திற்கு வரும் முன் தங்கள் ரயில் விவரத்தைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கே வெப்பநிலை 40 செல்சியஸ்க்கு மேல் பதிவானதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தீவிர காலநிலை மாற்றம் காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பெட்டேரி தாலாஸ், வெப்ப அலைகள் மேலும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். குறைந்தது 2060-கள் வரை ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.