நேற்று மாலை 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நம் தமிழ் திரைப்படங்கள் ‘சூரரைப் போற்று’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, ‘மண்டேலா’ ஆகியப் படங்கள் விருதுகளைக் குவித்திருந்தன. குறிப்பாக ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என 5 விருதுகளைக் குவித்திருந்தது. இதையடுத்து விருது பெற்ற அனைவரும் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தில் பொம்மியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி இந்த மகிழ்ச்சியான தருணம் பற்றி விகடனுடன் பகிர்ந்து கொண்டார்.
“நான் இதை எதிர்பார்க்கவில்லை. நேற்று மாலை தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கும் போதுகூட எனக்குக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. தேசிய விருதில் என்னுடையப் பெயரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் சுதா கொங்கராதான். இப்படத்தில் வாய்ப்பளித்து, எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர் அவர். இந்தப் பெருமை அவரைத்தான் சேரும். மேலும் சூர்யா, ஜி.வி பிரகாஷ், சுதா கொங்கரா என இவர்கள் எல்லோருக்கும் தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.