ஊடகங்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்: மத்திய அமைச்சர்!

அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட நாளான தேசிய ஒலிபரப்பு தினத்தை கொண்டாடு நிகழ்ச்சி ஆகாஷ்வானி பவனில் உள்ள ரங் பவன் அரங்கத்தில் நடைபெற்றது. அதில், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தொலைக்காட்சி, இணையத்தின் வருகையால் வானொலிக்கு நெருக்கடி ஏற்படப் போகிறது என்று சிலர் கருதிய போது, வானொலி அதன் பார்வையாளர்களை அடையாளம் கண்டு, அதன் இருப்பை மட்டுமல்லாமல், அதன் நம்பகத்தன்மையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்று, மக்கள் நடுநிலையான செய்திகளைக் கேட்க விரும்பும்போது, அவர்கள் இயல்பாகவே ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் செய்திகளுக்கு மாறுகின்றனர் என்றார்.

நாட்டின் 92 சதவீத பகுதிகள் மற்றும் 99 சதவீத மக்களை அகில இந்திய வானொலி சென்றடைந்துள்ளது பாராட்டத்தக்க சாதனையாகும் என்றும் அவர் தெரிவித்தார். வானொலியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் அனுராக் தாக்கூர், பல பிரதமர்கள் வந்திருக்கிறார்கள், ஆனால் வானொலியின் மதிப்பை யாரும் பார்க்கவில்லை, பிரதமர் நரேந்திர மோடி, தனது மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சிக்கு, மக்களுடன் நேரடியாக இணையும் ஒரு தளமாக அதைத் தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டார்.

‘ஊடகங்கள் நடத்தும் வழக்கு விசாரணைகள்’ என்ற பெயரில் தனியார் ஊடகங்கள் வாயிலாக எங்காவது தவறான கருத்து உருவாக்கப்படுமானால், நமது செயல்பாடுகள் குறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அனுராக் தாக்கூர் வலியுறுத்தினார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் முக்கியத்துவத்தை வழங்குவதில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகிய இரு நிறுவனங்களின் பங்கை பாராட்டிய அமைச்சர், சுதந்திரத்திற்குப் பிறகு பாடத்திட்டங்கள் பல பிராந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்கைக் குறிப்பிடாதபோது, வானொலி மற்றும் தூர்தர்ஷன் தகவல்களை சேகரித்தன. நாட்டின் தொலைதூர மூலைகளிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட வெளியே தெரியாத மாவீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் அதை தேசத்திற்கு வழங்கியதாக தெரிவித்தார்.

இரண்டு நிறுவனங்களுக்கும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், உள்ளடக்கம்தான் மக்களை இந்த அலைவரிசைக்கு ஈர்த்தது என்றும், கோபுரங்கள் மூலம் எவ்வளவு தூரம் சென்றடைந்தாலும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை ஒப்பிட முடியாது என்றும் கூறினார். டிஜிட்டல் யுகத்தில், வானொலி மக்கள் மத்தியில் தனது இருப்பை வலுப்படுத்தப் போகிறது என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய ஒலிபரப்பு தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பார்வையாளர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது வானொலியை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாகப் பல சுதந்திரப் போராளிகள் பயன்படுத்தியதை, முருகன் சுட்டிக்காட்டினார். நாட்டின் தொலைதூர மூலை முடுக்குகளை இணைப்பதில் வானொலி ஆற்றிய பங்கை அவர் நினைவுகூர்ந்தார். பிரசார் பாரதி உலகின் மிகப்பெரிய பொது ஒலிபரப்பு நிறுவனமாக திகழ்கிறது என்று பெருமிதம் பொங்க கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.