4 வருடங்களுக்கு பின்னர் ரன்பீர் கபூர் நடிப்பில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்த வாரம் வெளியானது “ஷம்ஷேரா”. ட்ரெய்லர் வெளியானபோது நேர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட ஷம்ஷேராவுக்கு, படம் வெளியான பிறகான துவக்க வசூல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரன்வீர் கபூர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ள போதிலும் பெரும்பாலான ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க தவறி இருக்கிறது.
150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பல நாட்கள் படப்பிடிப்புக்கு பின் வெளியான “ஷம்ஷேரா” நாடு முழுவதும் குவித்துள்ள முதல் நாள் வசூல் வெறும் 10.24 கோடி ரூபாய் மட்டுமே.! 2வது நாள் வசூலும் 10 கோடி ரூபாயை ஒட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மிக அதிக திரையரங்குகளில் அதாவது 4 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியான போதும், எதிர்பார்த்த வசூல் வராமல் போயிருப்பது படக்குழுவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் திரைப்பட ரிவியூக்களும் எதிர்மறையாக பதிவாக துவங்கியிருப்பது படத்தின் அடுத்தடுத்த நாட்கள் வசூலை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவை பல திரையரங்குகளில் படத்தை “தூக்கும்” வேலைகள் துவங்க வழிவகுக்கும் என்பதால் படம் படுதோல்வியை நோக்கி பயணிப்பதாக பாலிவுட் சினிமா விமர்சகரக்ள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழுக்கு விக்ரம், தெலுங்கிற்கு ஆர்.ஆர்.ஆர், கன்னடத்திற்கு கே.ஜி.எஃப் என பல மொழிகளைச் சேர்ந்த திரையுலகம் கொரோனா வீழ்ச்சிக்கு பின்னர் பீனிக்ஸ் பறவையாய் மேலெழும்பி விட்ட நிலையில், அப்படியான ஒரு எழுச்சிக்கு வெகு நாட்களாக பாலிவுட் போராடி வருகிறது. “ஷம்ஷேரா”வில் அந்த எழுச்சி கிடைக்கும் என அனுமானிக்கப்பட்ட நிலையில், துவக்க வசூல் நிலவரங்கள் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM