வேலூர் மாவட்டம், குடியாத்தம் அசோக் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். வெல்டிங் தொழிலாளி. இவர் 19 வயது மகன் ஸ்ரீசக்திவேல் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, மேற்படிப்பைத் தொடராமல் ஊர்ச் சுற்றி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, திருட்டுப் போன்ற குற்றப் பின்னணி கண்டறியப்பட்டதால், காவல்துறையினரின் கண்காணிப்பிலும் அவர் இருந்திருக்கிறார். 3 மாதங்களுக்கு முன்பு 50 கிராம் கஞ்சா பொட்டலத்துடன் பிடிபட்ட அவரை கைதுசெய்து, போலீஸார் சிறையிலும் அடைத்தனர். பிணையில் வெளி வந்தபோதும், தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். இந்த நிலையில், இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் நகர காவல்துறையினர் ஸ்ரீசக்திவேலை நேற்று முன்தினம் காவல் நிலையம் அழைத்து விசாரித்திருக்கிறார்கள். விசாரணைக்குப் பின்னர் அவரின் அண்ணனுடன் அனுப்பி வைத்ததாகவும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டிலிருந்த ஸ்ரீசக்திவேல் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
‘வயிற்று வலி’ காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், கைது நடவடிக்கைக்குப் பயந்துதான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, குடியாத்தம் டி.எஸ்.பி ராமமூர்த்தியிடம் கேட்டபோது, “இளைஞர் ஸ்ரீசக்திவேல், காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளவில்லை. அது மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி விவகாரம், ஆடிக்கிருத்திகை காவடி என அடுத்தடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். சந்தேகத்தின்பேரில், அழைத்து விசாரித்தப் பின்னர் அவரை பத்திரமாகத்தான் காவலர்கள் அனுப்பி வைத்தார்கள். வெளியில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. ’’ என்றார்.
குடியாத்தம் நகரக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லக்ஷ்மியிடம் கேட்டபோது, ‘‘குற்றப் பின்னணியுடைய ஸ்ரீசக்திவேல் வயிற்று வலியால்தான் உயிரை மாய்த்துகொண்டார். அவரின் தந்தை அப்படித்தான் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். காவல்துறையினர் மீது எந்த தவறும் இல்லை’’ என்றார்.