பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 500 நாட்களுக்கும் மேலாக சுவாமி விஜய் தாஸ் (65) என்பவர் போராட்டம் நடத்தி வந்தார். இந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படாத நிலையில், அவர் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவருமனையில் அனுமதித்தனர். கிட்டத்தட்ட 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சுவாமி விஜய் தாஸ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது தற்கொலை சம்பவம், ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பாரத்பூரில் உள்ள பசோபா கிராமத்தில் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பகுதியில் குவாரி அமைக்க சன்யாசிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம், சுவாமி கிருஷ்ணருடன் தொடர்புடைய இடம் என்பதால், இங்கு குவாரி அமைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு மற்றொரு சந்நியாசி இங்குள்ள மொபைல் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார். அவரை சமாதானப்படுத்தி இறக்கிவிட்டோம். தற்போது சுவாமி விஜய் தாஸ் என்ற சந்நியாசி, தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.