டெல்லி, அசோலா வனவிலங்கு சரணாலயத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சியில், டெல்லி போலீஸ் இரவோடு இரவாக பிரதமர் மோடியின் படங்களை வைத்து, மோடியின் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டதாக, ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், “டெல்லி போலீஸார் நேற்றிரவு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் வலுக்கட்டாயமாகப் பிரதமர் மோடியின் படங்கள் அடங்கிய பேனர்களை அங்கு வைத்தனர்.
அது மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி அரசுக்குச் சொந்தமான பேனர்கள் அங்கு கிழிக்கப்பட்டன. இது, கெஜ்ரிவால் அரசின் நிகழ்ச்சி, ஆனால் இப்போது அது மோடியின் அரசியல் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமர் மோடி, கெஜ்ரிவாலுக்குப் பயப்படுகிறார் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. மேலும் கெஜ்ரிவாலும், நானும் இப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.
எங்களின் அரசை இழிவுபடுத்தவே இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு அற்பமான குற்றச்சாட்டின் கீழ் சத்யேந்தர் ஜெயின் கைதுசெய்யப்பட்டார். இப்போது துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைக் கைதுசெய்ய சதி நடக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை போலீஸார் உறுதிசெய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், பிரதமர் மோடியின் பேனர்களையும் வைக்கக்கூடாது” எனக் கூறினார்.