பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங், “இந்தியாவில் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான பாகிஸ்தான் ஏஜென்டுகள், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அல்லது இந்துக்கள்தான்” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதானந்த் சிங், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு ஆர்.எஸ்.எஸ் போன்றதுதான்.
தனது சொந்த மக்களுக்கு சேவை செய்ய ஒரு அமைப்பை உருவாக்கும்போது, அவர்கள் ஏன் கலவரக்காரர்கள் என்றும் தேசவிரோதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்? நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் என, பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் ஏஜென்ட்டுகள், இந்துக்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் பேசும் இந்தியக் குடிமக்கள் தேச விரோதிகளாகக் கருதப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ளவர்களிடம் தொலைபேசியில் பேசுவது தேச விரோத செயலா?” எனக் கூறினார்.
ஜெகதானந்த் சிங்-கின் இத்தகைய வெளிப்படையான பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தலைவர் சந்தோஷ் சிங், “தேச விரோதிகளுக்கு ஆதரவாக, தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க, ஆர்.ஜே.டி இரு கட்சிகளையும் ஒருசேர சாடிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசித் நாத் திவாரி, “16 சதவிகித முஸ்லிம்கள் குறித்து 80 சதவிகித இந்துக்களின் மனதில் ஆர்.எஸ்.எஸ் எப்படி அச்சத்தை ஏற்படுத்துகிறதோ, அதையேதான் ஆர்.ஜே.டி-யும் செய்கிறது. இந்த இரு கட்சிகளும் தங்கள் சொந்த அரசியல் லாபத்துக்காக இதைச் செய்கின்றன” எனக் கூறியிருக்கிறார்.