சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தபட்ட நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்தும்… நலத்திட்டப்பணிகள் செய்ய மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியைப் பெற வேண்டிய பணிகள் குறித்தும் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் நடைபெற்றது. இதற்கு, விருதுநகர் நாடளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மேயர் சங்கீதா இன்பம், ஆணையாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி., “சிவகாசி நகராட்சியாக இருக்கும்போது மத்திய அரசு புறக்கணித்தது. ஆனால் தற்போது மாநகராட்சியாக்கப்பட்ட பின்பும் மத்திய அரசு சிவகாசியை புறக்கணிக்கிறது.
சிவகாசி மாநகராட்சிக்கு இதுவரை மத்திய அரசு ஒரு பைசாகூட நிதி ஒதுக்கித் தரவில்லை.
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணி குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிந்தவுடன் மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும். தொடர்ந்து அந்த பணிகள் குறித்த நடவடிக்கைகளை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் தொகுதி உறுப்பினர் கவனத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் கடந்த 2 ஆண்டுகளாக நிற்காமல் செல்வதற்கு காரணமான பா.ஜ.க.அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
சிவகாசி ரயில் நிலையத்தில் சென்னை-கொல்லம் விரைவு வண்டி நின்று செல்வது குறித்து பாராளுமன்றத்தில் நிச்சயம் குரல் கொடுப்பேன். வருகிற செப்டம்பர் 21-ம் தேதி முதல் கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவில்லை என்றால், மறுநாள் (செப்டம்பர் 22-ம் தேதி) பொதுமக்களை திரட்டி சிவகாசியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்தப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர், மேயர், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவுள்ளோம்” என்றார்.