சீர்காழி: குரூப் 4 தேர்வு; 5 நிமிட தாமதம்… அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வர்கள் வேதனை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வுக்கு மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாக்களில் 80 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 23,951 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்காக ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு துணை ஆட்சியர் நிலையில் தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு 80 தலைமை கண்காணிப்பாளர்கள், 7 பறக்கும்படை அலுவலர்கள், 16 சுற்றுக்குழு அலுவலர்கள், 80 ஆய்வு அலுவலர்கள், 84 வீடியோ கிராபர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்குத்  தரைதளத்தில் தேர்வு எழுத வசதி ஒவ்வொரு தேர்வுக் கூடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதுபவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து மையங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தேர்வு எழுத அனுமதி மறுப்பு

குறித்த நேரத்தில் குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர் சீட்டுகள் அந்தந்த மையங்களில் வழங்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள் எவ்வித சிரமமின்றி ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். மயிலாடுதுறை புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரியான  மாற்றுத்திறனாளி முத்துமாணிக்கம் என்ற தேர்வர் உதவி எழுத்தர் மூலம்தேர்வு எழுதி வருகிறார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே வளாகத்தில் இன்னொரு பள்ளியும் இருப்பதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 5 நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வெழுத எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வர்கள் தங்களைத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கெஞ்சி கேட்டும்,  அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். அப்போது தேர்வு எழுத மறுக்கப்பட்ட செய்தி குறித்து கேட்டதற்கு, “டி.என்.பி.சி கூறியிருக்கும் வழிகாட்டுதலின்படி ஐந்து நிமிடம் தாமதம் என்றாலும் ,அது தாமதம்தான். அதனால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது” என்றார்.

தேர்வு எழுத அனுமதி மறுப்பு

5 நிமிட தாமதத்தால் தேர்வெழுத முடியாமல் போன தேர்வுகள், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வு நடைபெறாததால் இரண்டு ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு தேர்வுக்கு தயாராகி வந்தோம். பள்ளியின்  பெயர் குளறுபடியால் ஐந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. அதற்காக எங்களை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் எங்கள் வாழ்க்கையில் விளையாடிவிட்டனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.