சுராணா நிறுவனம்: ரூ.8,000 கோடி நிதி மோசடி… மேலும் ஒருவர் கைது! – பின்னணி என்ன?

சட்டவிரோத தங்க விற்பனை:

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிறுவனம் சுராணா. இந்த நிறுவனம் தங்கம், எஃகு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் குழுமம், சுராணா இண்டஸ்ட்ரி லிமிடேட், சுராணா பவர் பிளான்ட் நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்திவந்தது. கடந்த 2012-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின்மீது வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகத் தங்கத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்டவிரோத தங்க விற்பனை

இந்தப் புகாரையடுத்து, அந்த நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், 400 கிலோ தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் புகார் குறித்த விசாரணையை சி.பி.ஐ விசாரித்துவந்த நிலையில், லாக்கரில் கைப்பற்றப்பட்ட தங்கத்தில் 104 கிலோ தங்கக்கட்டிகள் மாயமான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்கம் காணாமல் போனது தொடர்பாக, சுராணா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

சட்டவிரோத முதலீடு:

இந்த வழக்கு ஒருபுறம் நடக்க, சுராணா பவர் பிளான்ட் நிறுவனம், கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடகாவில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதாக வங்கிகளில் போலியான ஆவணங்களைக் கொடுத்து சுமார் 1,495 கோடி ரூபாய்க் கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில், சுராணா பவர் பிளான்ட் நிறுவனம் வட்டியோடு சேர்த்து 1,727 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ வங்கி மோசடிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

Enforcement Directorate

இது குறித்த விசாரணையின்போது நடைபெற்ற சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த நிறுவனம் கடனாகப் பெற்ற தொகையில் வெளிநாடுகளில் சட்டவிரோத முதலீடு செய்திருப்பதும், பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதும் தெரியவந்தது. இந்தப் புகார் தொடர்பாக, சுராணா நிறுவன இயக்குநர்கள் விஜயராஜ் சுராணா, தினேஷ் சந்த் சுராணா, கௌதம் ராஜ் சுராணா, சாந்திலால் சுராணா ஆகிய நான்கு பேர்மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்திருந்தது.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு:

விசாரணையின்போது, சுராணா நிறுவனம் பல ஆண்டுகளாகச் சரியான கணக்குக் காட்டவில்லை என்பதும், பொய்யான கணக்குகளைக் காட்டி 250 கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிறுவனத்தின்மீது, சட்டவிரோத தங்க இறக்குமதி, வங்கி மோசடி, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, வெளிநாடுகளில் சட்டவிரோத முதலீடு என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதுவரை, சுராணா நிறுவனம் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் அளவுக்குப் பண மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சி.பி.ஐ விசாரணை

இந்த மோசடி புகார் தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சுராணா நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜயராஜ் சுராணா, தினேஷ் சந்த் சுராணா இருவரையும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய நபர்களான ஆனந்த், பிரபாகரன் ஆகியோரைக் கைதுசெய்தது. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் வரும் 27-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வங்கி மோசடி:

ஏற்கெனவே நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சுராணா குழுமத்தைச் சேர்ந்த ஒருவர் தீவிர குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சுராணா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ராகுல் தினேஷ் சுராணா. இவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராகவும் இருக்கின்றார். இவர் சுராணா நிறுவனத்தின் பெயரில் பல்வேறு வங்கிகளில் 8,045 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. வருடக்கணக்கில் வாங்கிய கடனுக்குச் சரியாக வட்டி காட்டாமல் இருந்ததாக வங்கிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

ராகுல் தினேஷ் சுராணா

வங்கிகள் அளித்திருக்கும் புகாரில் அடிப்படையில், தீவிர குற்றத்தடுப்பு அதிகாரிகள் ராகுல் தினேஷ் சுராணாவை கைதுசெய்து கடன் தொகையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பாக 4,000 கோடி ரூபாய் பணம் மோசடி தொடர்பாக, இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ள நிலையில், 8,000 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.