“சோனியா குறித்து அவதூறு; மோடியும், நட்டாவும் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!'' – காங்கிரஸ்

காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா அவதூறாகப் பேசியதற்கு பிரதமர் மோடியும், ஜே.பி.நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “ஜூலை 23-ம் தேதி ஒரு தேசிய செய்தி சேனலில் நடந்த விவாதத்தின்போது சோனியா காந்திக்கு எதிராக, உங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா பயன்படுத்திய துஷ்பிரயோகமான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளுக்கு காங்கிரஸ் தனது கடுமையான ஆட்சேபனையைப் பதிவு செய்கிறது.

சோனியா காந்தி

கலாசாரம் பற்றி பேசும் பா.ஜ.க உயர்மட்ட தலைவர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள், நாட்டின் மரியாதைக்குரிய பெண்களுக்கு எதிராக, குறிப்பாக 75 வயதான ஒரு தேசிய கட்சியின் தலைவருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பலமுறை பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது பா.ஜ.க-வின், பெண்களுக்கு எதிரான சிந்தனையைக் காட்டுகிறது. பெண்களுக்கு மரியாதை செய்வது வேத காலத்திலிருந்தே இந்தியாவின் சிறந்த பாரம்பர்யமாக இருந்து வருகிறது. எனவே அரசியலில் கண்ணியம் மற்றும் பெண்களிடம் மரியாதைக்குரிய நடத்தை ஆகியவை ஆளும் பா.ஜ.க-விடம் இயல்பாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

ஆனால் கட்சி அதன் நடத்தையால் எங்களுக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அளித்து வருகிறது. உங்கள் கட்சித் தலைவர்களின் வெட்கக்கேடான மற்றும் அநாகரிகமான பேச்சுக்காக நாட்டுப் பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே பிரதமர் மோடிக்கும், உங்களுக்குமான எங்களின் வேண்டுகோள். மேலும், எங்கள் தலைவர் அல்லது வேறு எந்தத் தலைவருக்கு எதிராக தகாத வார்த்தைகளைத் திரும்பத் திரும்பப் பேசுவது, அவதூறு வழக்கு போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க எங்களை கட்டாயப்படுத்தும். அது மட்டுமல்லாமல், உங்கள் பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள், அரசியலின் கண்ணியத்தைப் புண்படுத்த வேண்டாம் என்றும், தவறான வார்த்தைகளில் பேசுவதைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

நரேந்திர மோடி

பிரதமர் மோடி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் நாட்டின் மரியாதைக்குரிய பெண்களுக்கு எதிராக, குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர் என்பது நாடு அறிந்ததே. இதுவரை பிரதமர் மோடி தன்னுடைய தகாத வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. இதுபோன்ற அவமரியாதை மற்றும் வெட்கக்கேடான பேச்சுகளால் நாட்டின் அரசியலின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.