புதுடெல்லி: டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மை தொற்று நோய் இருந்து வருகிறது. கடந்த மே மாதத்திலிருந்து குரங்கு அம்மை நோய் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருவது, உலக சுகாதார அமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட 31 வயதான நபர் சமீபத்தில் வெளிநாடு சென்ற பயண வரலாறு இல்லை என்றும் தொற்று பாதித்த நபர் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.