சென்னை / புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு டெல்லியில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட பிரிவு உபசார விழா விருந்தில், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்தார்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில், பிரிவு உபசார விழா விருந்து டெல்லியில் நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டது. அதில் பங்கேற்க பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனிருந்தார்.
திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து
அதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவை, டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது எம்பி.க்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தளவாய் சுந்தரம், மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.