புதுடில்லி: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் , உலக தடகள சாம்பியன்ஷிப் 18வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 23 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
போட்டி கடுமையாக இருந்தது; நீரஜ்
வெள்ளி பதக்கம் வென்றது குறித்து நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில்; கால நிலை சரியாக இல்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இருப்பினும், சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வெள்ளிப்பதக்கம் வென்றது திருப்தி. நாட்டிற்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி கடுமையாக இருந்தது. போட்டியாளர்கள் சவாலாக இருந்தனர். ஏராளமான விஷயங்களை இன்று நான் கற்று கொண்டேன். தங்கப்பதக்கத்திற்கான முயற்சி தொடரும். என்னால் முயன்றதை செய்வதுடன், பயிற்சியில் கவனம் செலுத்துவேன். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது எனக்கு நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. காமன்வெல்த் போட்டிகளில் எனது சிறப்பான திறமையை வெளிப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.
தாயார் மகிழ்ச்சி
நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றதும், அவரது தாயார் சரோஜ் தேவி, வீட்டில் உறவினர்களுடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: நீரஜ் சோப்ராவின் கடின உழைப்பு பலன் அளித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறோம். நீரஜ் பதக்கம் வெல்வார் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியாவிற்கான இந்த வெற்றியை நாங்கள் அனைவரும் கொண்டாடுவோம்.
பிரதமர் மோடி
நமது புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரால் ஒரு மகத்தான சாதனை. உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்று சிறப்பு மிக்க வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். இந்திய விளையாட்டிற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த தருணம். நீரஜ் சோப்ராவின் எதிர்கால சாதனைகளுக்கும் வாழ்த்துகள்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகள். இந்திய விளையாட்டு துறையை முன்னோக்கி எடுத்து செல்லும் பாராட்டுக்குரிய சாதனை இது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்
நீரஜ் சோப்ரா தனது வெற்றி வேட்கையை தொடர்கிறார். உலக சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் வெற்றி பெற்ற அவர், 88.13மீ., ஈட்டி எறிந்த முதல் இந்தியர், பதக்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒவ்வொரு சர்வதேச தொடரிலும் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின்
நீரஜ் சோப்ரா மீண்டும் ஒரு முறை வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் 2வது நபர் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் நாடே பெருமிதம் கொள்கிறது.
உ.பி., முதல்வர் யோகி
உலக தடகள சாம்பியன்ஷிப்பில், ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்துள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும், இந்த மறக்க முடியாத சாதனைக்காக மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். உங்களால் பெருமை கொள்கிறோம்.
மேலும் பல தலைவர்கள் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்