புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களான பால கங்காதர திலகர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் திலகர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் பற்றி பேசியதன் ஒரு பகுதியை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “பாரதத் தாயின் 2 சிறந்த மகன்களான லோகமான்ய திலகர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரின் பிறந்த நாளில் அவர்களுக்கு தலைவணங்குகிறேன். இந்த இரண்டு தலைவர்களும் தைரியம் மற்றும் தேச பக்தியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். இவர்கள் பற்றி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் நான் பேசியதை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோவில், “எத்தனையோ பெரிய மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளனர். அவர்களில் ஒரு ஆளுமை பால கங்காதர திலகர். இந்தியர்களின் மனதில் அழியா தடம் பதித்தவர்” என்று அவர் கூறியுள்ளார்.
லோகமான்ய திலகருடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட மும்பை லோகமான்ய சேவா சங்கத்திற்கு பிரதமர் முன்பு சென்று வந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பதிவில், “லோகமான்ய திலகரின் நீடித்த மரபுகளில் ஒன்று பெரிய அளவிலான விநாயகர் உற்சவம் ஆகும். இது மக்களிடையே கலாச்சார உணர்வை தூண்டியது. எனது மும்பை பயணத்தின்போது லோகமான்ய திலகருடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட லோகமான்ய சேவா சங்கத்திற்கு சென்றேன்’’ என்று கூறியுள்ளார்.
லோகமான்ய பால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டிலும் சந்திரசேகர் ஆசாத் 1906-ம் ஆண்டிலும் பிறந்தவர்கள் ஆவர்.
‘டிஜிட்டல் ஜோதி’
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ‘டிஜிட்டல் ஜோதி’ மூலம் அஞ்சலி செலுத்தி 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “நமது சுதந்திரப் போராட்ட நாயகர்களுக்கு சிறப்பு அஞ்சலி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘டிஜிட்டல் ஜோதி’ உருவாக்கப்பட்டுள்ளது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்க இது உங்களை அனுமதிக்கிறது.
டெல்லியில் உள்ள மத்திய பூங்காவில் ‘ஸ்கை பீம்’ விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. செலுத்தப்படும் ஒவ்வொரு அஞ்சலியும் டிஜிட்டல் ஜோதியின் வெளிச்சத்தை பிரகாசமாக்கும். இந்த முயற்சியில் பங்கேற்று 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை வலுப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.