பொய்க்கால் குதிரை படத்தில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்: பிரபுதேவா

பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛மை டியர் பூதம்' படம் வரவேற்பை பெற்றது. இதில் பூதமாக பிரபுதேவா நடித்திருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இவர் நடித்துள்ள 'பொய்க்கால் குதிரை' படத்தை ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார் . இரு ஹீரோயின்கள் நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமாரும், ரைசா வில்சனும் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் 'பொய்கால் குதிரை' படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபுதேவா பேசியதாவது: இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. நடன இயக்குனர் சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள்.

சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளை பின்னணி பேசும்போது பார்வையிடுவோம். இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும் போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை தான். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை. சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும். ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, 'இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?' என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும்.

இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொணர்ந்தார். 'பொய்க்கால் குதிரை' நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ரசித்து, ஆதரவு தர வேண்டும்.'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.