மதுரை: செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் அதிமுகவினர் 3 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆர்ப்பாட்டம் போர்வையில் தொண்டர் பலத்தை காட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மதுரை; மதுரையில் நாளை 3 இடங்களில் வீட்டு வரி முதல் மின்கட்டணம் வரை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் போர்வையில் தொண்டர் பலத்தை காட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயகுமார், முனனாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் நிர்வாகிகள், தொண்டர்களை பெரும் அளவில் திரட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரிவுக்கு பிறகு வீட்டு வரி, மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து கே.பழனிசாமி முதல் முறையாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி மதுரையில் அதிமுக மூன்று இடங்களில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுரை தினமணி தியேட்டர் அருகில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்பி.உதயகுமார் தலைமையில் மேற்கு மாவட்டம் சார்பில் அம்மா கோயிலில் நடக்கிறது. ராஜன் செல்லப்பா தலைமையில் கிழக்கு மாவட்டம் சார்பில் கருப்பாயூரணியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் மத்தியில் விலைவாசி உயர்வை கண்டித்து நடப்பதாக இருந்தாலும் கே.பழனிசாமி தரப்பினர் தொண்டர்களை அதிகளவு திரட்டி அதிமுக தங்கள் பக்கம்தான் இருப்பதாக காட்டுவதற்காகதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
அதற்காக நகர், புறநகர் பகுதியில் மதுரை மாநகர, புறநகர் அதிமுக சார்பில் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து சுவரொட்டிகளை திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டியுள்ளனர்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”திமுக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகிவிட்டது. தேர்தல் நேரத்தில் விடியலை தருவோம் என்று மக்களிடத்திலே பொய்யான வாக்குறுதியை கூறி வெற்றி பெற்று பொய்யான ஆட்சியை செய்து வருகிறார்கள். ஆனால் விடியலை தருவதற்கு பதிலாக மக்களுக்கு துயரத்தை தருகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்து வரியையும் உயர்த்தி இன்றைக்கு தமிழக மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.
இந்த விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடக்கும் அதிமுக சார்பில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள், பகுதி, வட்ட, சார்பு அணி செயலாளர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். மதுரையில் நடக்கின்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழகம் உற்று நோக்கும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.