மேடையில் மோடி பேனர்களை வலுக்கட்டாயமாக கட்டிய டெல்லி போலீஸ்! விழாவை புறக்கணித்த கேஜ்ரிவால்

டெல்லி அரசு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்களை டெல்லி போலீஸார் வலுக்கட்டாயமாக கட்டியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள அஸோலா வனவிலங்கு சரணாலயத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது. டெல்லி அரசு சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு, விழா மேடையை அமைக்கும் பணியில் தொழிலாளர்களும், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களும் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
image
இதையடுத்து, தாங்களே மோடியின் பேனர்களை எடுத்து வந்து வலுக்கட்டாயமாக அவற்றை மேடையில் கட்டினர். பின்னர் அந்த பேனர்களை யாரும் கழட்டி விடாமல் அங்கேயே காவல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த தகவலை அறிந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அந்நிகழ்ச்சியை இன்று புறக்கணித்தார்.
image
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டெல்லி போலீஸார் நேற்று இரவு தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தனர். இது முழுக்க முழுக்க டெல்லி அரசாங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி. அதனால் பிரதமரின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்படவில்லை. ஆனால் டெல்லி போலீஸார் பிரதமர் மோடியின் பேனர்களை வைத்ததுடன் அவற்றுக்கும் காவலும் நின்றனர். மேலும், டெல்லி அரசின் பேனர்களையும் போலீஸார் கிழித்தெறிந்தனர். டெல்லி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியாக இதனை நாங்கள் கருதினோம். அதனால் நிகழ்ச்சியை புறக்கணிப்பது என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், நானும் முடிவெடுத்தோம். இவ்வாறு கோபால் ராய் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.