சென்னை: விரைவு பேருந்துகளில் கூரியர், சரக்கு போக்குவரத்தை ஆக.3 முதல் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் விரைவுப் பேருந்துகளின் சுமைப் பெட்டியை மாத வாடகைக்கு விடும் திட்டம் ஆக.3 முதல்செயல்பாட்டுக்கு வரும் என்று போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அதன்படி, விரைவுப் பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டியை வணிகர்கள் நாள் அல்லது மாத வாடகைக்கு எடுத்துதங்களது பொருள்களை அனுப்ப முடியும். உதாரணமாக, சென்னை – திருச்சிக்கு ஒருநாள் வாடகை (80 கிலோ வரை) ரூ.210 எனவும், மாத வாடகை ரூ.6,300 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் விரைவுப் பேருந்துகளில் கூரியர் அனுப்ப ரூ.50 (250 கிராம்) அனுப்பும் திட்டமும் அமல்படுத்தப்படுகிறது.இதுகுறித்து பேருந்துகளில் விளம் பரம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.