டெல்லியில் குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியின் மெளலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 வயதான அந்த இளைஞருக்கு காய்ச்சல் மற்றும் தோலில் புண்கள் இருப்பதால் உள்நோயாளியாக அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, பரிசோதனைகள் மேற்கொண்டதில் அவருக்கு குரங்கு அம்மை உறுதியானதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்ட நிலையில், டெல்லியில் அந்நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை நாட்டில் குரங்கம்மை பாதிப்பு உறுதியானவர்கள் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் என்ற நிலையில், இன்று எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளாத டெல்லி இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது. இளைஞருக்கு எப்படி தொற்று ஏற்பட்டிருக்கும் என்பதை கண்டறியும் பணிகளையும் சுகாதாரத் துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
சமீப நாட்களில் இந்த டெல்லி இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, உலகம் முழுவதும் 72 நாடுகளில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் குரங்கு அம்மையை உலக சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM