NEP 2020: தேசிய கல்விக் கொள்கை: மேற்கு வங்க அரசுடன் பேசி வருகிறோம் – மத்திய கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கையை, மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்துவது குறித்து, அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை – 2020ஐ அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. எனினும், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, தேசிய கல்விக் கொள்கையின் சாதக – பாதகங்கள் குறித்து ஆராய, 10 பேர் அடங்கிய குழு அமைத்துள்ளது. இந்தக் குழு, புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில், பாஜகவைச் சேர்ந்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எந்தக் காரணத்திற்காக ஒருவர் தேசிய கல்விக் கொள்கை – 2020க்கு எதிராக உள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. இது வேலைவாய்ப்பை உருவாக்கும்; நவீனமானது மற்றும் சமகாலமானது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அனைத்துப் பங்குதாரர்களிடமிருந்தும் சிறந்த கருத்துகளைப் பெற்றுள்ளோம். தேசிய கல்விக் கொள்கையை, மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்துவது குறித்து, அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஆஃப்லைனில் வெற்றிகரமாக நடத்தி 45 நாட்களுக்குள் முடிவுகளை வெளியிட்ட சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு பாராட்டுகள். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆண்களை விட பெண்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.